< Back
கிரிக்கெட்
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முதல் முறையாக வீரர்கள் ஏலம்: டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் அறிமுகம்
கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முதல் முறையாக வீரர்கள் ஏலம்: டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் அறிமுகம்

தினத்தந்தி
|
27 Dec 2022 12:56 AM IST

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முதல்முறையாக வீரர்கள் ஏலம் விடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 2016-ம் ஆண்டில் இருந்து டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் அதிகபட்சமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 முறை சாம்பியன் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

7-வது டி.என்.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி இந்த சீசனில் சில அதிரடி மாற்றங்களை செய்ய டி.என்.பி.எல். ஆட்சி மன்ற குழு முடிவு செய்துள்ளது.

டி.என்.பி.எல். போட்டியில், அணிகளுக்கு இதுவரை குறிப்பிட்ட வீரர்களை தேர்வு செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தனர். இனி ஒதுக்கீடு முறை இருக்காது. அதற்கு பதிலாக ஐ.பி.எல். போன்று டி.என்.பி.எல். போட்டியிலும் வீரர்கள் ஏலத்தில் விடப்பட இருக்கிறார்கள். இதற்காக ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.70 லட்சம் செலவு செய்யலாம். வீரர்கள் விடுவிப்பு, தக்கவைப்பது, அவர்களுக்கு ஊதியம் நிர்ணயம் உள்ளிட்டவை அணி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து இறுதி செய்யப்படும். இதே போல் நடுவர்களின் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை சரி செய்ய வகை செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பமும் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது.

பதிவு செய்ய வேண்டுகோள்

போட்டியில் பங்கேற்க விரும்பும் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் நாளை முதல் ஜனவரி 20-ந்தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்திலோ அல்லது டி.என்.சி.ஏ, டி.என்.பி.எல். இணையதளத்திலோ பெற்றுக் கொள்ளலாம்.

பதிவு செய்யும் வீரர்கள், உண்மையான காயம் அல்லது இந்திய அணிக்காக விளையாடுவது, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மற்ற போட்டிகளில் ஆடுவது போன்ற காரணத்தை தவிர்த்து டி.என்.பி.எல்.-ல் பங்கேற்காத பட்சத்தில் அத்தகைய வீரர்களை தமிழக 20 ஓவர் போட்டிக்கான அணித் தேர்வுக்கு பரிசீலிப்பது இல்லை. இந்த முடிவை உயர்மட்ட கவுன்சிலுக்கு பரிந்துரைப்பது என்றும் ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேற்கண்ட தகவல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ. பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்