டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெல்லை ராயல் கிங்ஸ்
|நெல்லை அணி 11 ஓவர்களில் இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
திண்டுக்கல்,
8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) இரு ஆட்டங்கள் நடக்கின்றன. முதலில் தொடங்கும் 7-வது லீக் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை சந்தித்தது.
பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டியானது மழை காரணமாக ஆட்டநேரம் சிறிதுநேரம் பாதிக்கப்பட்டதால், போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டு உள்ளது. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி திண்டுக்கல் அணி முதலில் களமிறங்கியது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷால் வைத்யாவும், கேப்டன் ஹரி நிஷாந்தும் களமிறங்கினர். விஷால் 45 ரன்களும், ஹரி நிஷாந்த் 37 ரன்களும் எடுத்து அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்கவில்லை.
இறுதியில் அந்த அணி 12 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்ரீ நிரஞ்ஜனும், சூர்யபிரகாசும் களமிறங்கினர். சூர்யபிரகாஷ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். நிரஞ்சன் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பாபா அபராஜித்தும், சஞ்சய் யாதவும் திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இவர்களை பிரிக்க திண்டுக்கல் பந்துவீச்சாளர்கள் திணறினர். இருவரும் அரைசதத்தை கடந்த நிலையில் போட்டியை வெற்றியுடன் முடித்துவைத்தனர்.
இறுதியில் நெல்லை அணி 11 ஓவர்களில் இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பாபா அபராஜித் 59 ரன்களும், சஞ்சய் யாதவ் 55 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.