டி.என்.பி.எல்: திண்டுக்கல்லுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றி..!
|இன்று நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.
திண்டுக்கல்,
6-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது. அடுத்த கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் விஷால் வைத்யா ரன் எதுவும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின்னர் ஹரி நிஷாந்த் 24 ரன்களும், மணி பாரதி 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களில் மோஹித் ஹரிஹரன் தவிர மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். மோஹித் ஹரிஹரன் 43 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது. மதுரை அணி சார்பில் சன்னி சந்து 3 விக்கெட்டுகள், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி பேட்டிங் செய்தது. மதுரை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அருண் கார்த்திக் சிறப்பாக விளையாடி 41 ரன்கள் எடுத்து அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார்.
மற்றொரு தொடக்க வீரர் விக்னேஷ் ஐயர் 11 ரன்களும், சதுர்வேத் 10 ரன்களும் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய பாலசந்தர் அனிருத் 51 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். ஜெகதீசன் கவுசிக்கும் ஆட்டமிழக்காமல் 6 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இந்த நிலையில் 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு மதுரை பாந்தர்ஸ் அணி 126 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 27 பந்துகள் மீதமிருந்த நிலையில் மதுரை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.