டிஎன்பிஎல்: திருச்சி அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்
|மதுரை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
சேலம்,
8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளன. 2 நாள் ஓய்வை தொடர்ந்து கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடந்தது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மதுரை -திருச்சி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் அந்த அணியின் அருண் கார்த்திக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் பாலசந்தர் அனிருத் ,ஆதித்யா இருவரும் சிறப்பாக விளையாடினர்.அனிருத் 34 ரன்கள் ,ஆதித்யா 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த ஜெகதீசன் கௌசிக் 22 ரன்கள் ,சன்னி சந்து 24 ரன்கள் எடுத்தனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது மதுரை அணி.தொடர்ந்து 137ரன்கள் இலக்குடன் திருச்சி அணி விளையாயது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அமித் சத்விக், சந்தோஷ் சிவ் இருவரும் தலா 23 மற்றும் 33 ரன்கள் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட தவறினர்.
மதுரை அணியின் பந்துவீச்சில் திருச்சி அணியின் பேட்டிங் வரிசை சீட்டுக்கட்டு போல சரிந்தது. முடிவில் அந்த அணி 18.4 ஓவர்களில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதனால், மதுரை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.