டிஎன்பிஎல்: சேலம் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் வெற்றி..!
|20 ஓவர்கள் முடிவில் சேலம் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.
கோவை,
6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் அடுத்த கட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற போட்டியில் சேலம் அணியை மதுரை அணி எதிர் கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மதுரை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அருண் கார்த்திக் 13 ரன்களிலும் ராஜ்குமார் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து கணேஷ் மூர்த்தி பந்துவீச்சில் விக்னேஷ் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
ஒரு முனையில் விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரித்திக் ஈஸ்வரன் 27 பந்துகளில் 41 ரன்கள் குவித்து சிறப்பான பங்களிப்பை அளித்தார். இறுதியில் மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது.
சேலம் அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கோபிநாத் 15 ரன்களிலும் அபிஷேக் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டேரில் பெராரியோ 19 ரன்கள், முருகன் அஸ்வின் 10 ரன்கள், ஜாஃபர் ஜமால் 13 ரன்களில் அவுட்டாகினர். இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் சேலம் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. பிரனவ் குமார் 25 ரன்கள், கணேசன் பெரியசுவாமி 8 ரன்கள் எடுத்து களத்தில் நின்றனர்.
இதையடுத்து 39 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது. மதுரை அணியில் சிறப்பாக பந்து வீசிய ரகுபதி சிலம்பரசன் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் ராக்கி மற்றும் சரவணன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். சன்னி சந்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.