டி.என்.பி.எல்: ஈஸ்வரன் அபார பந்துவீச்சு...திண்டுக்கல் டிராகன்ஸ் 160 ரன்கள் சேர்ப்பு
|திருச்சி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஈஸ்வரன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
சேலம்,
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். கிரிக்கெட் 2016-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. இதுவரை 7 சீசன் நடந்துள்ளது. 8-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி நேற்று சேலத்தில் தொடங்கியது . சேலம், நெல்லை, கோவை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய 5 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் இன்று மாலை நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற திருச்சி அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து திண்டுக்கல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஷிவம் சிங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அஸ்வின் 5 ரன்னிலும் அடுத்து வந்த விமல் குமார் 9 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஷிவம் சிங்குடன், பாபா இந்திரஜித் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் அதிரடியாக ஆடிய ஷிவம் சிங் அரைசதம் அடித்த நிலையில் 78 ரன்னிலும், இந்திரஜித் 33 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய தினேஷ் ராஜ் 1 ரன், சரத் குமார் 0 ரன், கிஷோர் 2 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து பூபதி குமார் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 8 விக்கெட்டை இழந்து 160 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் தரப்பில் அதிகபட்சமாக ஷிவம் சிங் 78 ரன்கள் எடுத்தார். திருச்சி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஈஸ்வரன் ஹாட்ரிக் உடன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி ஆட உள்ளது.