டி.என்.பி.எல்.: மதுரை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய திண்டுக்கல் டிராகன்ஸ்
|இந்த தோல்வியின் மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது.
திண்டுக்கல்,
8 அணிகள் இடையிலான 8-வது டி என் பி எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்றிரவு தொடங்கியது. 24-வது லீக்கில் திண்டுக்கல் டிராகன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணி 5 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது. நடப்பு தொடரில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். கடைசி ஓவரில் சதத்தை நிறைவு செய்த தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் 106 ரன்களுடன் (57 பந்து, 6 பவுண்டரி, 10 சிக்சர்) களத்தில் இருந்தார். இந்த சீசனில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும்.
இதனையடுத்து 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மதுரை அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 171 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் திண்டுக்கல் 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
6-வது லீக்கில் ஆடி 4-வது வெற்றியை ருசித்த திண்டுக்கல் டிராகன்ஸ், 3-வது அணியாக அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்றது. 4-வது தோல்வியை தழுவிய மதுரை பாந்தர்ஸ் வெளியேறியது.