டி.என்.பி.எல். கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்..? திண்டுக்கல் - கோவை அணிகள் இன்று பலப்பரீட்சை
|திண்டுக்கல் - கோவை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
சென்னை,
8 அணிகள் பங்கேற்ற 8-வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. இந்த தொடரின் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் கோவை கிங்சும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்த இரு அணிகளில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். முதலாவது தகுதி சுற்றில் திருப்பூர் தமிழன்சை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டிய ஷாருக்கான் தலைமையிலான கோவை அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் குறியில் உள்ளது.
அதே போல வெளியேற்றுதல் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியையும், 2-வது தகுதி சுற்றில் திருப்பூர் தமிழன்சையும் வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல்முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.