டி.என்.பி.எல். கிரிக்கெட்: இறுதிப்போட்டியை எட்டும் 2-வது அணி எது? திண்டுக்கல் - நெல்லை அணிகள் இன்று மோதல்
|நெல்லையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்சும், நெல்லை ராயல் கிங்சும் மோதுகின்றன.
நெல்லை,
7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. நெல்லை சங்கர் நகரில் உள்ள ஐ.சி.எல். மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்சும், நெல்லை ராயல் கிங்சும் மோதுகின்றன.
பாபா இந்திரஜித் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தது. முதலாவது தகுதி சுற்றில் 30 ரன்கள் வித்தியாசத்தில் கோவையிடம் தோற்ற திண்டுக்கல் அணிக்கு இன்னொரு வாய்ப்பு கிட்டியுள்ளது. அந்த ஆட்டத்தில் மாற்று வீரர் சரத்குமார் (8 சிக்சருடன் 62 ரன்), வேகப்பந்து வீச்சாளர் சுபோத் பாட்டி (4 விக்கெட்) தவிர்த்து மற்றவர்கள் சோபிக்கவில்லை. கேப்டன் இந்திரஜித், ஷிவம் சிங், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் கைகொடுத்தால் தான் எழுச்சி பெற முடியும். ஏற்கனவே லீக் சுற்றில் நெல்லையை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் விளையாடுவார்கள். இதில் வெற்றி பெற்றால் திண்டுக்கல் அணி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணி லீக் சுற்றில் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தை பெற்றது. அதைத் தொடர்ந்து நடந்த பரபரப்பான வெளியேற்றுதல் சுற்றில் ராஜகோபால், அஜிதேஷ் ஆகியோரது அரைசதத்தின் உதவியுடன் 4 ரன் வித்தியாசத்தில் மதுரையை விரட்டியது. அதே உத்வேகத்துடன் முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டும் வேட்கையில் அதுவும் உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் நெல்லை வீரர்கள் வரிந்து கட்டுவதற்கு ஆயத்தமாகியுள்ளனர்.
இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதில் வெற்றி காணும் அணி 12-ந்தேதி நடக்கும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் கோவை கிங்சை சந்திக்கும்.