டி.என்.பி.எல். கிரிக்கெட் ஜூன் 12-ந்தேதி தொடக்கம் - அட்டவணை வெளியீடு
|தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் கோவையில் சந்திக்கின்றன.
சென்னை,
7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை, நத்தம் (திண்டுக்கல்), கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
இதன்படி டி.என்.பி.எல். கிரிக்கெட் ஜூன் 12-ந்தேதி தொடங்கி ஜூலை 12-ந்தேதி வரை நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் கோவையில் (இரவு 7 மணி) சந்திக்கின்றன. மறுநாள் அதாவது ஜூன் 13-ந்தேதி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, சேலம் ஸ்பார்டன்சை எதிர்கொள்கிறது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது அடுத்த லீக் ஆட்டங்களில் திருப்பூர் தமிழன்ஸ் (ஜூன்.15), கோவை கிங்ஸ் (19-ந்தேதி), திண்டுக்கல் டிராகன்ஸ் (21-ந்தேதி), நெல்லை ராயல் கிங்ஸ் (24-ந்தேதி), மதுரை பாந்தர்ஸ் (26-ந்தேதி), திருச்சி (ஜூலை.2) ஆகிய அணிகளுடன் மோதுகிறது. இறுதிப்போட்டி ஜூலை 12-ந்தேதி நெல்லையில் அரங்கேறுகிறது. பிளே-ஆப் சுற்று ஆட்டங்களுக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) உண்டு. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முதல்முறையாக டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.