டிஎன்பிஎல் கிரிக்கெட்: சாய் சுதர்ஷன் அதிரடி - கோவை கிங்ஸ் 179 ரன்கள் குவிப்பு
|தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் இன்று தொடங்கியுள்ளது.
கோவை,
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கரத்தில் உள்ள வீரர்கள் மட்டுமின்றி, கிராமப்புற அளவிலான திறமையான வீரர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு வலுவான ஒரு அடித்தளத்தை அமைத்து கொடுக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 முறை கோப்பையை வென்றிருக்கிறது. இதில் கடந்த ஆண்டு இறுதிப்போட்டி மழையால் பாதியில் ரத்தானதால் கோவை கிங்சுடன் இணைந்து கோப்பையை பகிர்ந்து கொண்டதும் அடங்கும். தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் (இப்போது சேலம் ஸ்பார்டன்ஸ்) மதுரை பாந்தர்ஸ் அணிகள் தலா ஒரு முறை கோப்பையை கையில் ஏந்தியுள்ளன.
இந்நிலையில், 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. கோவையில் நடைபெறும் முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற திருப்பூர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் கோவை அணி வீரர் பி.சாய் சுதர்ஷன் அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார்.முகிலேஷ் 33 ரன்கள், கேப்டன் ஷாருக் கான் 25 ரன்கள் சேர்த்தனர்.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் கோவை அணி 179 ரன்கள் குவித்தது. இதையடுத்து 180 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் திருப்பூர் அணி விளையாடி வருகிறது. திருப்பூர் அணி தரப்பில் விஜய் சங்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாய் கிஷோர் 2 விக்கெட் எடுத்தார்.