டி.என்.பி.எல். கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி
|மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றிபெற்றது.
திண்டுக்கல்,
திண்டுக்கலில் இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து மதுரை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கார்த்திக், ஹரி நிஷாந்த் ஆகியோர் களம் இறங்கினர். இதில் கார்த்திக் 4 ரன், ஹரி நிஷாந்த் 24 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய ஜெகதீசன் கவுசிக் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடி 45 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் வாஷிங்டன் சுந்தர் 12 ரன், ஸ்வப்னில் சிங் 0 ரன், தீபன் லிங்கேஷ் 9 ரன், சுதன் கண்டேபன் 0 ரன், ஸ்ரீ அபிஷேக் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதனால் மதுரை அணி 100 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் மதுரை அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 123 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. திண்டுக்கல் அணியின் சார்பில் அதிகபட்சமாக சரவண குமார், சுபோத் பாத்டி ஆகியோர் தலா 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணியின் சார்பில் முதலில் களமிறங்கிய சிவம் சிங் 9 ரன்களும், விமல் குமார் 6 ரன்களும், அருண் 3 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக பாபா இந்திரஜித், ஆதித்யா கணேஷ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியா ரன்கள் குவித்த இந்த ஜோடியில் பாபா இந்திரஜித் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய இந்த ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.
முடிவில் பாபா இந்திரஜித் 48 பந்துகளில் 4 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 78 ரன்களும், ஆதித்யா கணேஷ் 22 (22) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் திண்டுக்கல் அணி 14.1 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்தது. மதுரை பாந்தர்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக குர்ஜப்நீட் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றிபெற்றது.