டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருப்பூரை வீழ்த்தியது திண்டுக்கல்
|‘டாஸ்’ ஜெயித்த திண்டுக்கல் கேப்டன் அஸ்வின் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
கோவை,
8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கோவையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 16-வது லீக்கில் திருப்பூர் தமிழன்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்சை சந்தித்தது. தொடங்குவதற்கு முன்பே மழை புகுந்து விளையாடியதால் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் 13 ஓவர் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. 'டாஸ்' ஜெயித்த திண்டுக்கல் கேப்டன் அஸ்வின் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 13 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் ராதாகிருஷ்ணன் 36 ரன்னும், துஷர் ரஹேஜா 32 ரன்னும் எடுத்தனர். திண்டுக்கல் தரப்பில் சுபோத் பாத்தி 3 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் ஆடிய திண்டுக்கல் அணி 11.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாபா இந்திரஜித் 31 ரன்களும், பூபதி குமார் 51 ரன்களும் (25 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி களத்தில் இருந்தனர். 4-வது லீக்கில் ஆடிய திண்டுக்கல் அணிக்கு இது 2-வது வெற்றியாகும். திருப்பூருக்கு 3-வது தோல்வியாகும்.
இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் (இரவு 7.15 மணி) அணிகள் மோதுகின்றன.