டி.என்.பி.எல். கிரிக்கெட்: நெல்லையை வீழ்த்தியது திண்டுக்கல் - புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்தது
|திண்டுக்கல் அணி 3 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
திருநெல்வேலி,
8 அணிகள் இடையிலான 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 12-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று இரவு நடக்கும் 23-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நெல்லை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் அருண் கார்த்திக், ஸ்ரீ நெரஞ்சன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஸ்ரீ நெரஞ்சன் 6 ரன்னில் வீழ்ந்தார்.
இதையடுத்து களம் இறங்கிய நிதிஷ் ராஜகோபால் 13 ரன், அஜிதேஷ் குருசாமி 17 ரன், ரித்திக் ஈஸ்வரன் 18 ரன், மறுமுனையில் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய அருண் கார்த்திக் 39 ரன், சோனு யாதவ் 2 ரன் எடுத்து சீரான இடைவெளியில் அவுட் ஆகினர்.
இறுதியில் நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களே எடுத்தது. நெல்லை அணி தரப்பில் ஹரிஷ் 21 பந்தில் 34 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய விமல் குமார், ஷிவம் சிங் இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்த நிலையில் ஷிவம் சிங் 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து 62 ரன் எடுத்த நிலையில் விமல் குமார் ரன் அவுட்டானார். இறுதியில், திண்டுக்கல் அணி 3 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது திண்டுக்கல் அணி பெறும் 5-வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளது.