டி.என்.பி.எல். கிரிக்கெட்: கோவை அணி தொடர்ந்து 4-வது வெற்றி
|டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கோவை கிங்ஸ் அணி, திருச்சியை வீழ்த்தி தொடர்ந்து 4-வது வெற்றியை பதிவு செய்தது.
கோவை,
8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் தொடரின் 15-வது லீக்கில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் அணி, திருச்சி கிரான்ட்சோழாசை நேற்றிரவு எதிர்கொண்டது. 'டாஸ்' ஜெயித்த கோவை கேப்டன் ஷாருக்கான் ஈரப்பதமான ஆடுகளத்தன்மையை மனதில் கொண்டு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த திருச்சி அணியினர், கோவையின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். அர்ஜூன் மூர்த்தி (3 ரன்), விக்கெட் கீப்பர் வாசீம் அகமது (17 ரன்) சியாம் சுந்தர் (5 ரன்), கேப்டன் அந்தோணி தாஸ் (0), நிர்மல்குமார் (3 ரன்), சரவணகுமார் (1 ரன்) ஆகியோர் அணியின் ஸ்கோர் 35 ரன்னை எட்டுவதற்குள் நடையை கட்டினர். இப்படிப்பட்ட மோசமான சூழலில் 7-வது விக்கெட்டுக்கு சஞ்சய் யாதவும், ஜாபர் ஜமாலும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். ஸ்கோர் 91 ஆக உயர்ந்த போது சஞ்சய் யாதவ் 34 ரன்னில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் மேலும் இரு விக்கெட் சரிந்தாலும் ஜாபர் ஜமால் கடைசி ஓவரில் அட்டகாசமான 3 சிக்சர் விரட்டி ஸ்கோர் 120-ஐ கடக்க வைத்தார். இதில் ஒரு சிக்சர் 100 மீட்டர் தூரத்திற்கு ஸ்டேடியத்திற்கு வெளியே போய் விழுந்தது.
20 ஓவர் முடிவில் திருச்சி அணி 9 விக்கெட்டுக்கு 124 ரன் எடுத்தது. ஜாபர் ஜமால் 41 ரன்களுடன் (28 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். கோவை தரப்பில் ஷாருக்கான், முகமது தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 125 ரன் இலக்கை நோக்கி களம் இறங்கிய கோவைக்கு, முதல் ஓவரிலேயே ேவகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சன் 'செக்' வைத்தார். அவரது பந்து வீச்சில் சுரேஷ்குமார் (0), சாய் சுதர்சன் (4 ரன்) வீழ்ந்தனர். ஆனாலும் 3-வது விக்கெட்டுக்கு சுஜயும், முகிலேசும் இணைந்து நிலைத்து நின்று விளையாடி அணியை சிக்கலில் இருந்து வெகு சீக்கிரமாக மீட்டனர். இந்த கூட்டணியை 7 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் அசைக்க முடியவில்லை.
கோவை அணி 16.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. முகிலேஷ் 63 ரன்னுடனும் (54 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), சுஜய் 48 ரன்னுடனும் (39 பந்து, 7 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.
இந்த சீசனில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான கோவை கிங்ஸ் தொடர்ச்சியாக 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் வகிப்பதுடன், 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பையும் நெருங்கியது. 4-வது லீக்கில் ஆடிய திருச்சிக்கு இது 2-வது தோல்வியாகும்.
இன்றைய ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் (இரவு 7.15 மணி) மோதுகின்றன.