டி.என்.பி.எல். கிரிக்கெட்: 5 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி திரில் வெற்றி
|டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில், நெல்லை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி வெற்றிபெற்றது.
சேலம்,
8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளன.
2 நாள் ஓய்வை தொடர்ந்து கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது. இதில் இன்று நடைபெற்ற 26 ஆவது லீக் ஆட்டத்தில் கோவை -நெல்லை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.
அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸ்ரீதர் ராஜுவும், சுரேஷ் குமாரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஸ்ரீதர் ராஜு 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். சிறப்பாக விளையாடிய சுரேஷ் குமார் 75 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த சாய் சுதர்ஷன் அதிரடியாக விளையாடி 35 ரன்களை திரட்டினார்.
இறுதியில் கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணியில் சார்பில் ஸ்ரீநடராஜன் மற்றும் சூர்ய பிரகாஷ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
இந்த ஜோடியில் ஸ்ரீநடராஜன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பாபா அபராஜித்துடன் ஜோடி சேர்ந்த சூர்ய பிரகாஷ் 45 (33) ரன்கள் எடுத்திருந்தநிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து பாபா அபராஜித்தும் 37 (31) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் இந்திரஜித் 5 ரன்களும், அதிரடி காட்டிய அஜிதேஷ் 17 (5) ரன்களும், ரூபன் ராஜ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், ஷாஜகான் 2 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.
மறுமுனையில் தனது அதிரடியான ஆட்டத்தால் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சஞ்சய் யாதவ், கடைசி ஒவரில் 5 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டநிலையில் 54 (31) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய அதிசயராஜ் டேவிட்சன் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
முடிவில் ஈஸ்வரன், ஹரிஷ் ஆகியோர் (0) ரன் ஏதும் எடுக்காமல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் நெல்லை அணி 20 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. கோவை அணியின் சார்பில் அதிகபட்சமாக திவாகர் 3 விக்கெட்டுகளும், அஜித் ராம் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அபிஷேக் தன்வார் மற்றும் மணிஷ் ரவி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் நெல்லை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.