டி.என்.பி.எல். கிரிக்கெட்: முதலாவது தகுதி சுற்றில் கோவை-திண்டுக்கல் இன்று பலப்பரீட்சை
|டி.என்.பி.எல். கிரிக்கெட்டின் முதலாவது தகுதி சுற்றில் கோவை-திண்டுக்கல் அணிகள் இன்று மோதுகின்றன.
சேலம்,
7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் (12 புள்ளி), திண்டுக்கல் டிராகன்ஸ் (12 புள்ளி), நெல்லை ராயல் கிங்ஸ் (10 புள்ளி), மதுரை பாந்தர்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின. மயிரிழையில் வாய்ப்பை நழுவவிட்ட 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (6 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (4 புள்ளி), சேலம் ஸ்பார்டன்ஸ் (4 புள்ளி), பால்சி திருச்சி (0) அணிகள் வெளியேறின.
இந்த நிலையில் சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள எஸ்.சி.எப். மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அரங்கேறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டாப்-2 இடங்களை பிடித்த கோவை கிங்சும், திண்டுக்கல் டிராகன்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக நட்சத்திர வீரர் சாய் சுதர்சன் சென்று விட்டாலும் அந்த அணி இன்னும் வலுவாகவே தென்படுகிறது. கேப்டன் ஷாருக்கான், சுரேஷ்குமார், சுஜய், எம்.சித்தார்த், தாமரைக்கண்ணன், யுதீஸ்வரன் நல்ல பார்மில் உள்ளனர். ஏற்கனவே லீக் சுற்றில் திண்டுக்கல் டிராகன்சை 59 ரன் வித்தியாசத்தில் பந்தாடி இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் இறங்குவார்கள்.
திண்டுக்கல் அணியில் கேப்டன் ஆர்.அஸ்வின், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட கிளம்பி விட்டதால் அந்த அணி பாபா இந்திரஜித் தலைமையில் ஆடுகிறது. வருண் சக்ரவர்த்தி, சுபோத் பாட்டி, ஷிவம் சிங், விமல்குமார், மதிவாணன் நம்பிக்கை அளிக்கிறார்கள். கடைசி 3 லீக்கில் வரிசையாக வெற்றி கண்டிருக்கும் திண்டுக்கல் அணி அதே உத்வேகத்துடன் பதிலடி கொடுக்க வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது வெளியேற்றுதல் சுற்றில் (நெல்லை-மதுரை) வெற்றி காணும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் மோதும்.
இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.