< Back
கிரிக்கெட்
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்கு
கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்கு

தினத்தந்தி
|
31 July 2022 11:07 PM IST

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கோவை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவை,

6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட்போட்டி இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று அரங்கேறிய சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், கோவை கிங்சும் பலப்பரீட்சையில் இறங்கி உள்ளன.

இதனிடையே வழக்கமாக 7.15 மணிக்கு தொடங்கும் டி.என்.பி.எல் போட்டி இன்று மழை காரணமாக டாஸ் போடுவதில் நீண்ட நேரம் தாமதம் ஆகியது. மழை நின்றபின் மீண்டும் போட்டி தொடங்கபட்டால் ஓவர்கள் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் மைதானத்தில் மழை நின்றபின் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு 9 மணியளவில் டாஸ் போடப்பட்டது.

டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கோவை அணியின் சார்பில் கங்கா ஸ்ரீதர் ராஜு மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் சுரேஷ் குமார் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து கங்கா ஸ்ரீதர் ராஜுவுடன் சாய் சுதர்ஷன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக துவங்கிய இந்த ஜோடியில் கங்கா ஸ்ரீதர் ராஜு 27 (17) ரன்களில் கேட்ச் ஆனார்.

அடுத்து களமிறங்கிய முகிலேஷ் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிஜித் சந்திரன் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்ததாக சாய்கிஷோருடன் கேப்டன் ஷாருக்கான் ஜோடி சேர்ந்தார். இதனிடையே மறுமுனையில் அதிரடி காட்டி ரன் குவிப்பில் ஈடுபட்ட சாய் கிஷோர் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

தொடர்ந்து சீரான ரன் குவிப்பில் ஈடுபட்ட இந்த ஜோடியால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. இந்த சூழலில் இந்த ஜோடியில் ஷாருக்கான் 22 (17) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேற, அடுத்து களமிறங்கிய அபிஷேக் தன்வார் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த சாய் சுதர்ஷன் 65 (42) ரன்களில் கேட்ச் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய பாலா சூர்யா (0) ரன் எதுவும் எடுக்காமலும், மணீஷ் ரவி 2 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

முடிவில் வள்ளியப்பன் யுதீஸ்வரன் 1 ரன்னும், அஜித் ராம் 5 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது. சேப்பாக் அணியின் சார்பில் அதிகபட்சமாக சந்தீப் வாரியர் 4 விக்கெட்டுகளும், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளும், சோனு யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் கோவை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்