டி.என்.பி.எல். கிரிக்கெட்: நெல்லையில் இன்று 2 லீக் ஆட்டங்கள்
|நெல்லையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் திருப்பூர்-சேலம், நெல்லை-திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன.
நெல்லை,
8 அணிகள் இடையிலான 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 12-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கோவையில் 6 லீக் ஆட்டங்களும், திண்டுக்கல்லில் (நத்தம்) 7 ஆட்டங்களும், சேலத்தில் 8 ஆட்டங்களும் நடந்தன. சேலத்திற்குரிய சுற்று நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.
சேலம் சுற்று முடிவில் கோவை கிங்ஸ் 6 ஆட்டங்களில் ஆடி 5-ல் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. நெல்லை அணி (8 புள்ளி) 2-வது இடத்திலும், திண்டுக்கல் அணி (8 புள்ளி) 3-வது இடத்திலும், மதுரை அணி (6 புள்ளி) 4-வது இடத்திலும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (4 புள்ளி) 5-வது இடத்திலும் உள்ளன. புதிய அணியான பால்சி திருச்சி 5 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.
போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும். முதல்தர போட்டிகளில் விளையாட இருப்பதால் ஆர்.அஸ்வின் (திண்டுக்கல்), சாய் சுதர்சன் (கோவை), சாய் கிஷோர் (திருப்பூர்) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இனி வரும் ஆட்டங்களில் இருந்து விலகி இருக்கின்றனர். இந்த நிலையில் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. அங்கு 7 லீக் ஆட்டங்களுடன் இறுதிப்போட்டியும் அரங்கேறுகிறது.
இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மாலை 3.15 மணிக்கு நடக்கும் 22-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ள சதுர்வேத் தலைமையிலான திருப்பூர் அணி 3-வது வெற்றியை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க மும்முரம் காட்டும். அதேநேரத்தில் ஒரு வெற்றி, 4 தோல்வி அடைந்துள்ள அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் அணி இந்த ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை முழுமையாக இழக்க நேரிடும் என்பதால் கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இரவு 7.15 மணிக்கு நடக்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ்-பாபா இந்திரஜித் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் சந்திக்கின்றன. தலா 8 புள்ளிகளுடன் உள்ள இவ்விரு அணிகளும் இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அடுத்த சுற்றை உறுதி செய்து விடும். உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் ஆடுவது நெல்லை அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்.