டி.என்.பி.எல்: திண்டுக்கல் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கோவை
|திண்டுக்கல் அணி 19.1ஓவர்களில் 147 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
சேலம்,
8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவை, நத்தம் (திண்டுக்கல்), சேலம், நெல்லை ஆகிய 4 இடங்களில் நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது சேலத்தில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி, டிஎன்பிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் மாலை 3.15 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ஷாரூக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுஜய் 31 ரன்களும், சுரேஷ் குமார் 29 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய சாய் சுதர்ஷன், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 41 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முகிலேஷ் 34 ரன்களும், கேப்டன் ஷாருக் கான் 18 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. திண்டுக்கல் தரப்பில் அதிகபட்சமாக சரவனகுமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி விளையாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுலும், சிவம் சிங்கும் களமிறங்கினர்.
ராகுல் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருமுனையில் சிவம் சிங் அணியின் வெற்றிக்கு போராடிக்கொண்டிருந்தார். ஆனால் எதிர்முனையில் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
சிவம் சிங் தனது பங்குக்கு 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சரத் குமார் 36 ரன்கள் எடுத்தார். கோவை அணியின் அபார பந்துவீச்சால், திண்டுக்கல் அணியால் வெற்றி இலக்கிற்கு அருகில் கூட செல்லமுடியவில்லை.
இறுதியில் திண்டுக்கல் அணி 19.1ஓவர்களில் 147 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. கோவை தரப்பில் கௌதம் தாமரை கண்ணன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் கோவை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.