டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மகுடம் சூடப்போவது யார்?
|டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கோவை,
6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட்போட்டி 'கிளைமாக்ஸ்' கட்டத்துக்கு வந்து விட்டது. கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், கோவை கிங்சும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.
டி.என்.பி.எல். வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி (3 முறை) என்ற பெருமைக்குரிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி லீக் சுற்றில் முதல் இரு ஆட்டங்களில் முறையே நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகளிடம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு தங்களின் அனுபவம் வாய்ந்த வீரர்களின் எழுச்சியால் கில்லீஸ் அணி அடுத்த 5 லீக் ஆட்டங்களிலும், அதைத் தொடர்ந்து முதலாவது தகுதி சுற்றிலும் வெற்றி பெற்று இறுதிசுற்றுக்கு வந்திருக்கிறது.
கேப்டன் கவுசிக் காந்தி (225 ரன்), சசிதேவ் (204 ரன்), ஜெகதீசன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேட்டிங்கில் கைகொடுக்கிறார்கள். ஆல்-ரவுண்டராக சாய் கிஷோர் (5 ஆட்டத்தில் 111 ரன் மற்றும் 8 விக்கெட்), ஹரிஷ்குமார் (104 ரன் மற்றும் 5 விக்கெட்) மிரட்டுகிறார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் அலெக்சாண்டர், சித்தார்த் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். எனவே ஒருங்கிணைந்து விளையாடும்பட்சத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசின் வீறுநடையை தடுப்பது கடினம். ஏற்கனவே கோவை கிங்சை லீக் சுற்றில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் இறங்குவார்கள்.
கோவை எப்படி?
ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி லீக் சுற்றில் 4 வெற்றி, 3 தோல்விகளுடன் இழுபறியோடு கடைசி அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு வந்தது. வெளியேற்றுதல் சுற்றில் முன்னாள் சாம்பியன் மதுரையை விரட்டியடித்த அந்த அணி நெல்லைக்கு எதிரான 2-வது தகுதி சுற்றில் 209 ரன்கள் இலக்கை கடைசி பந்தில் எட்டிப்பிடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. விக்கெட் கீப்பர் சுரேஷ்குமார் (3 அரைசதத்துடன் 393 ரன்), சாய் சுதர்சன் (271 ரன்), கேப்டன் ஷாருக்கான் (165 ரன் மற்றும் 11 விக்கெட்), கங்கா ஸ்ரீதர் ராஜூ உள்ளிட்டோர் பேட்டிங்கில் வலுசேர்க்கிறார்கள். நடப்பு தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவரான வேகப்பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வார் (17 விக்கெட்) பந்துவீச்சில் மிரட்டுகிறார். உள்ளூர் ரசிகர்களின் உற்சாகம் அந்த அணிக்கு மேலும் பலம் சேர்க்கும்.
இந்த சீசனில் நெல்லை, திண்டுக்கல் நத்தம், சேலம், கோவை ஆகிய இடங்களில் டி.என்.பி.எல். போட்டி நடந்துள்ளது. இதுவரை 5 முறை 200 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் மூன்று கோவை மைதானத்தில் பதிவானது.
திருச்சி வாரியர்சுக்கு எதிராக நெல்லை அணி 2 விக்கெட்டுக்கு 236 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக உள்ளது. அதே போன்று இன்றைய ஆட்டத்திலும் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.
இரவு 7.15 மணிக்கு...
மொத்தத்தில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.20 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கவுசிக் காந்தி (கேப்டன்), ஜெகதீசன், ராதாகிருஷ்ணன், சாய் கிஷோர், சசிதேவ், ஆர்.சதீஷ், ஹரிஷ்குமார், சோனு யாதவ், சித்தார்த், சந்தீப் வாரியர், அலெக்சாண்டர்.
கோவை கிங்ஸ்: கங்கா ஸ்ரீதர் ராஜூ, சுரேஷ் குமார், சாய் சுதர்சன், ஷிஜித் சந்திரன், ஷாருக்கான் (கேப்டன்), முகிலேஷ், அபிஷேக் தன்வார், திவாகர், மனிஷ் ரவி, அஜித் ராம், பாலு சூர்யா.
இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
கேப்டன்கள் சொல்வது என்ன?
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் கவுசிக் காந்தி கூறுகையில், 'கோவை அணியை ஏற்கனவே வீழ்த்தியிருந்தாலும், இப்போது மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடக்கும் இந்த ஆட்டத்தில் அதுவும் அவர்களின் ரசிகர்கள் முன் எதிர்கொள்வது என்பது எளிதாக இருக்காது. ஆனால் வெற்றிக்காக நாங்கள் முழு முயற்சியை வெளிப்படுத்துவோம்' என்றார்.
கோவை கேப்டன் ஷாருக்கான் கூறுகையில், 'சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எப்படிப்பட்ட கடினமான அணி என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை குறிப்பிட்ட நாளில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணியே வெற்றி பெறும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் விளையாட இருப்பதால் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்.' என்றார்.
இறுதிப்போட்டிக்குள் நுழைந்த விதம்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
லீக் சுற்று
நெல்லையுடன் சூப்பர் ஓவரில் தோல்வி
மதுரை அணியுடன் 4 விக்கெட்டில் தோல்வி
திருச்சி வாரியர்சுடன் 44 ரன்னில் வெற்றி
கோவை கிங்சுடன் 5 விக்கெட்டில் வெற்றி
திண்டுக்கல் டிராகன்சுடன்
5 விக்கெட்டில் வெற்றி
சேலம் அணியுடன் 7 விக்கெட்டில் வெற்றி
திருப்பூர் அணியுடன் 60 ரன்னில் வெற்றி
பிளே-ஆப் சுற்று
முதலாவது தகுதி சுற்றில்
நெல்லையுடன் 5 விக்கெட்டில் வெற்றி
கோவை கிங்ஸ்
லீக் சுற்று
திண்டுக்கல் டிராகன்சுடன் 5 விக்கெட்டில் தோல்வி
மதுரையுடன் 2 விக்கெட்டில் தோல்வி
சேலம் அணியுடன் 8 விக்கெட்டில் வெற்றி
திருச்சியுடன் 5 விக்கெட்டில் வெற்றி
சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் 5 விக்கெட்டில் தோல்வி
திருப்பூர் அணியுடன் 9 விக்கெட்டில் வெற்றி
நெல்லையுடன் 5 ரன்னில் வெற்றி
பிளே-ஆப் சுற்று
வெளியேற்றுதல் சுற்றில் மதுரையுடன் 20 ரன்னில் வெற்றி
2-வது தகுதி சுற்றில் நெல்லையுடன்
2 விக்கெட்டில் வெற்றி