< Back
கிரிக்கெட்
டிஎன்பிஎல்: ஹாட்ரிக் வெற்றியை நோக்கி சேப்பாக் சூப்பர் கில்லீஸ்...கோவை அணியுடன் நாளை மோதல்...!
கிரிக்கெட்

டிஎன்பிஎல்: 'ஹாட்ரிக்' வெற்றியை நோக்கி சேப்பாக் சூப்பர் கில்லீஸ்...கோவை அணியுடன் நாளை மோதல்...!

தினத்தந்தி
|
18 Jun 2023 6:27 PM IST

7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந்தேதி கோவையில் தொடங்கியது.

திண்டுக்கல்,

7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந்தேதி கோவையில் தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதிபெறும். கோவையில் 6 'லீக்' போட்டிகள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினத்தோடு அங்கு போட்டிகள் நிறைவு பெற்றன.

நேற்றைய ஓய்வுக்கு பிறகு டி.என்.பி.எல். போட்டிகள் இன்று முதல் திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் 7 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது

டி.என்.பி.எல். போட்டியின் 9-வது 'லீக்' ஆட்டம் திண்டுக்கல்லில் நாளை (19-ந்தேதி) இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தான் மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்சை 52 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் திருப்பூர் தமிழன்சை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது.

நாளைய போட்டியில் கோவை கிங்சை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றியை பெறும் ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இருக்கிறது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது. பிரதோஷ் ரஞ்சன்பால், பாபா-அபராஜித், சஞ்சய் யாதவ், கேப்டன் ஜெகதீசன், ஹரீஸ்குமார், ரகீல்ஷா போன்ற சிறந்த வீரர்கள் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் உள்ளனர்.

கோவை கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை 70 ரன்னில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் நெல்லை ராயல் கிங்சிடம் கடைசி பந்தில் தோற்றது. அந்த அணி 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது. கோவை அணியில் சாய் சுதர்ஷன், கேப்டன் ஷாருக்கான் போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர். சாய் சுதர்ஷன் 2 ஆட்டத்தில் 2 அரைசதத்துடன் 176 ரன்கள் எடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்