அபராஜித் பொறுப்பான ஆட்டம்... சேலம் அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
|சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் அதிகபட்சமாக பாபா அபராஜித் 41 ரன்கள் அடித்தார்.
கோவை,
டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் சேலம் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சந்தோஷ் குமார் 17 ரன்களிலும், ஜெகதீசன் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களில் கேப்டன் பாபா அபராஜித் தவிர மற்ற வீரர்கள் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபராஜித் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் அபிஷேக் தன்வார் (26 ரன்கள் 8 பந்துகள்) அதிரடியாக விளையாட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 41 ரன்கள் அடித்தார். சேலம் தரப்பில் பொய்யாமொழி மற்றும் சன்னி சந்து தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி சேலம் களமிறங்க உள்ளது.