டி.என்.பி.எல். ஏலம்: சஞ்சய் யாதவை ரூ.17.60 லட்சத்துக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வாங்கியது
|டி.என்.எபி.எல். கிரிக்கெட் ஏலத்தில் அதிகபட்சமாக சாய் சுதர்சனை ரூ.21.60 லட்சத்துக்கு கோவை கிங்ஸ் வாங்கியது. ஆல்-ரவுண்டர் சஞ்சய் யாதவை ரூ.17.60 லட்சத்துக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எடுத்தது.
சென்னை,
8 அணிகள் பங்கேற்கும் 7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன், ஜூலை மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு இதுவரை வீரர்கள் ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டு முதல்முறையாக வீரர்களை ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டது.
இதன்படி டி.என்.பி.எல். வீரர்களின் 2 நாள் ஏலம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஹென்சஸ் நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது. ஏலத்தில் 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ஆர்.அஸ்வின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5 நாட்கள் ஓய்வு கிடைத்ததால் அவரும் தங்கள் அணிக்குரிய வீரர்களை ஏலத்தில் எடுக்க வந்திருந்தார்.
ஒவ்வொரு அணியும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் ஊதியத்தையும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.70 லட்சம் வரை செலவிட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஏலத்தில் மொத்தம் 943 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். சர்வதேச, உள்ளூர், டி.என்.பி.எல். போட்டிகளில் விளையாடிய அனுபவத்தின் அடிப்படையில் வீரர்களுக்கான அடிப்படை விலை ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம், ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம் வீதம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஏலத்தை பிரபல டெலிவிஷன் வர்ணனையாளர் சாரு ஷர்மா நடத்தினார்.
சாய் சுதர்சன், சஞ்சய் யாதவ், ஷிவம் சிங்
சாய் சுதர்சனுக்கு 'ஜாக்பாட்'
ஏலத்தில் முதல் வீரராக இந்திய அணிக்காக ஆடியவரும், ஆல்-ரவுண்டருமான விஜய் சங்கரின் பெயர் வாசிக்கப்பட்டது. ரூ.3 லட்சத்தில் இருந்து அவரது ஏலத் தொகை ஆரம்பித்தது. அவரை எடுக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் ஆர்வம் காட்டின. இறுதியில் ரூ.10¼ லட்சத்திற்கு திருப்பூர் தமிழன்ஸ் அணி அவரை வாங்கியது.
அதிகபட்சமாக பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் ரூ.21.60 லட்சத்திற்கு விலை போனது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ரூ.2 லட்சத்தில் இருந்து தொடங்கிய அவரை தங்கள் அணிக்கு இழுக்க நெல்லை ராயல் கிங்ஸ், கோவை கிங்ஸ் வரிந்து கட்டின. ரூ.21 லட்சத்தை கடந்ததும் நெல்லை பின்வாங்கியது. அதைத் தொடர்ந்து ரூ.21.60 லட்சத்திற்கு அவரை கோவை அணி சொந்தமாக்கியது.
சாய் சுதர்சன் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அங்கு அவரது ஊதியம் ரூ.20 லட்சம் தான். அதை விட இங்கு ரூ.1.6 லட்சம் கூடுதலாக பெறப்போகிறார் என்பது சுவாரஸ்யமான விஷயமாகும்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
சாய் சுதர்சனுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச விலைக்கு ஆல்-ரவுண்டர் எஸ்.சஞ்சய் யாதவ் ஏலம் போனார். சஞ்சய் யாதவுக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ் இடையே கடும் போட்டி நிலவியது. மாறி மாறி விலையை உயர்த்தியபடி வந்தன. கடைசியில் ரூ.17.60 லட்சத்திற்கு அவரை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தட்டிச் சென்றது. முன்னதாக அவரது தம்பி சோனு யாதவை (ரூ.15.20 லட்சம்) நெல்லை ராயல் கிங்சிடம் நழுவ விட்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நிர்வாகம், சஞ்சய் யாதவை விட்டு விடக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்து அதில் வெற்றியும் பெற்றது.
இதே போல் அதிரடியில் கலக்கக்கூடிய ஹரிஷ்குமாரை ரூ.12.80 லட்சத்திற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பெற்றது. ஹரிஷ்குமார் ஏற்கனவே கில்லீஸ் அணிக்காகத் தான் விளையாடி வந்தார். ஆனால் அவரை தக்க வைக்க முடியாத சூழலில் ஏலத்தில் அவரை கில்லீஸ் வாங்கியிருக்கிறது. பேட்ஸ்மேன் பாபா அபராஜித்துக்கு திண்டுக்கல், நெல்லை, சேப்பாக் ஆகிய அணிகள் போட்டியிட்ட நிலையில், அவரை ரூ.10 லட்சத்திற்கு தங்கள் படைக்கு சேப்பாக் கொண்டு வந்தது.
சோனு யாதவ், அபிஷேக் தன்வர், சாய் கிஷோர், ஹரிஷ்குமார்
சாய் கிஷோர்- ஷிவம் சிங்
சுழல் ஜாலத்தில் மிரட்டக்கூடிய சாய் கிஷோருக்கும் கடும் கிராக்கி காணப்பட்டது. திண்டுக்கல், சேப்பாக், திருப்பூர், மதுரை ஆகிய அணிகள் அவருக்கு குறி வைத்தன. ரூ.13 லட்சம் வரை அவரது விலை எகிறிய நிலையில் அந்த தொகைக்கு திருப்பூர் அணி வசப்படுத்தியது. இதே போல் சுழற்பந்து வீச்சாளர் ஷிவம் சிங்கை ரூ.15.95 லட்சத்துக்கு திண்டுக்கல் டிராகன்சும், வேகப்பந்து வீசக்கூடிய ஆல்-ரவுண்டர் அபிஷேக் தன்வரை ரூ.13.20 லட்சத்திற்கு சேலம் ஸ்பார்டன்சும் வாங்கியது. கே.பி.அருண் கார்த்திக் (ரூ.12 லட்சம், நெல்லை அணி), ஸ்வப்னில் சிங் (ரூ.12 லட்சம், மதுரை), ஹரி நிஷாந்த் (ரூ.12.20 லட்சம், மதுரை) ஆகியோரும் கணிசமான தொகைக்கு விலை போனார்கள்.
அதேசமயம் இந்திய அணிக்காக விளையாடும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மிக குறைந்த தொகைக்கு ஏலம் போனார். அவரை ரூ.6¾ லட்சத்திற்கு மதுரை பாந்தர்ஸ் எடுத்தது. டி.என்.பி.எல். நடக்கும் சமயத்தில் அவர் சர்வதேச போட்டியில் விளையாட வாய்ப்பு இருப்பதால் அதை கவனத்தில் கொண்டு மற்ற அணிகள் அவரை எடுப்பதில் தீவிரம் காட்டவில்லை. இந்திய அணிக்காக விளையாடி காயத்தால் ஒதுங்கிய வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜனுக்கும் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. அவரை ரூ.6¼ லட்சத்திற்கு திருச்சி வாங்கியது.
முதல் நாளில் 76 வீரர்கள் ஏலம் போனார்கள், ஏலம் இன்றும் தொடர்ந்து நடைபெறும்.
டி.என்.பி.எல். ஏலம் வீரர்களுக்கு நல்ல பலன் அளிக்கும்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் பேட்டி
டி.என்.பி.எல். ஏலத்தில் பங்கேற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஐ.பி.எல். போன்று டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் ஏலம் நடப்பது வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். முன்பு வீரர்களின் விலையில் கட்டுப்பாடு இருந்தது. ரூ.5 லட்சம், ரூ.8 லட்சம் என்று குறிப்பிட்ட தொகைக்கு மேல் அவர்களுக்கு கிடைக்காது. ஆனால் இப்போது அந்த கட்டுப்பாடு இல்லை. ஏலம் விடப்படுவதன் மூலம் அவர்களின் திறமைக்கு ஏற்ப இதைவிட அதிக தொகை ஊதியமாக கிடைக்கப்போகிறது. எனவே ஏலம் வீரர்களுக்கு நல்ல விஷயமாகும்.
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் முக்கியம். நாங்கள் வழக்கமாக 3 இடக்கை சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆடுவது வழக்கம். ஏலத்தில் எடுத்திருக்கும் சஞ்சய் யாதவ் இடக்கை சுழற்பந்து வீசுவதுடன் அடித்து ஆடக்கூடியவர். கடந்த சீசனில் அவர் தான் அதிக ரன் (9 ஆட்டங்களில் 452 ரன்) குவித்திருந்தார். இதே போல் ஹரிஷ்குமாரும் அதிரடி காட்டுவார். இதுவரை சரியான கலவையில் எங்களது அணி அமைந்துள்ளது. வீரர்களின் தேர்வு திருப்தி அளிக்கிறது. 2-வது நாளில் திறமையான புதுமுக வீரர்களை எடுக்க திட்டமிட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.
டி.என்.பி.எல். ஏலத்திற்கு வரவேற்பு தெரிவித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ஆர். அஸ்வின், 'வீரர்களின் ஒதுக்கீடு முறையை விட ஏலம் முறை சிறந்தது. ஏலத்தின் மூலம் எல்லா அணிகளுக்கும் சிறந்த வீரர்களை எடுக்க சம வாய்ப்பு கிடைக்கும். போட்டியின் விறுவிறுப்பும் அதிகரிக்கும். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் எந்த போட்டியையும் நான் தவற விடுவது கிடையாது. இந்த சீசனில் டி.என்.பி.எல்.-ல் நான் முழுமையாக ஆடுவேன்' என்றார்.
'டி.என்.பி.எல். 4 இடங்களில் நடைபெறும்' - அசோக் சிகாமணி
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி நிருபர்களிடம் கூறுகையில், '7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி திண்டுக்கல், கோவை, சேலம், நெல்லை ஆகிய 4 இடங்களில் நடைபெறும். அடுத்த ஆண்டு போட்டியில் மேலும் இரு மாவட்டங்கள் சேர்க்கப்படும்.
மாவட்டங்களில் போட்டி நடக்கும் போது புதிதாக நிறைய ரசிகர்கள் வருகிறார்கள். மைதானமும் நிரம்பி வழிகிறது. அதனால் தான் சென்னையை விட மாவட்டங்களில் நடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். சென்னை சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கும் பணி ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது. மார்ச் 2-வது அல்லது 3-வது வாரத்தில் புதுப்பிக்கப்பட்ட பகுதி திறக்கப்படும்' என்றார்.