இது இந்தியா விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் - பாக். முன்னாள் வீரர்
|சூர்யகுமார் யாதவை தேர்ந்தெடுக்காமல் இத்தொடரில் கவுதம் கம்பீர் தவறு செய்து விட்டதாக சல்மான் பட் விமர்சித்துள்ளார்.
கொழும்பு,
இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் இலங்கை வென்றுள்ளது. அதனால் 27 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு எதிராக இருதரப்பு ஒருநாள் தொடரை வென்று இலங்கை அசத்தியுள்ளது.
இந்த தோல்விக்கு இலங்கையின் ஸ்பின்னர்களை சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது. ரோகித் சர்மா தவிர இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான சுப்மன் கில், விராட் கோலி ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் இந்த தொடரில் சோபிக்க தவறினர்.
குறிப்பாக சுழலுக்கு சாதகமான கொழும்பு மைதானத்தில் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை அடித்தால் மட்டுமே அசத்த முடியும் என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். அதை இலங்கை பேட்ஸ்மேன்கள் சரியாக செய்ததாகவும் ரோகித் தெரிவித்திருந்தார். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் அந்த ஷாட்டுகளை அதிகமாக அடிக்காததே தோல்விக்கு காரணமானதாக ரோகித் சர்மா ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் ஸ்பின்னர்களுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் ஸ்வீப் ஷாட்டுகளை அசால்டாக அடிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார். எனவே அவரை தேர்ந்தெடுக்காமல் இத்தொடரில் கவுதம் கம்பீர் தவறு செய்து விட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "சுழலுக்கு எதிராக விளையாடுவதில் இந்தியா தங்களுடைய அணுகுமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு கட்டத்தில் அவர்கள் அதில் சிறந்தவர்களாக இருந்தனர். ஆனால் சமீப காலங்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடுவதில் அவர்கள் சராசரிக்கு நிகராக கூட இல்லை. இத்தொடரில் சூர்யகுமாரை பயிற்சியாளர் கம்பீர் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவர் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஸ்வீப் ஷாட்டுகளை வலுவாக அடிக்கக் கூடியவர். இது போன்ற மைதானங்களில் ஸ்வீப் ஷாட்டுகள் முக்கியமானதாக இருக்கும். எனவே சூர்யகுமாரை தவிர்த்து ஸ்வீப் ஷாட்டுகளை சிறப்பாக அடிக்கக்கூடிய மற்ற வீரர்கள் இந்திய அணியில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
எனவே இத்தொடரில் சூர்யகுமாரை தேர்ந்தெடுக்காமல் இந்தியா ட்ரிக்கை தவற விட்டுள்ளது. அதே சமயம் இலங்கை ஸ்பின்னர்கள் நன்றாக பந்து வீசினர். அவர்கள் உலக சாம்பியனை 3 வகையான துறைகளிலும் வீழ்த்தியுள்ளனர். நீங்கள் இலங்கையை பாராட்ட வேண்டும். இது இந்தியா விழித்துக் கொள்ள வேண்டிய நேரமாகும். இந்த சுற்றுப்பயணத்தை மகிழ்ச்சியாக துவங்கிய அவர்களுக்கு இப்படி நடந்துள்ளது. அவர்களின் புதிய பயிற்சியாளர் சிலவற்றை மாற்றுவதைப் பற்றி சிந்திக்க வேண்டும். குறிப்பாக சுழலுக்கு சாதகமான சூழ்நிலைகளில் இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்டிங் சிறப்பாக இல்லை" என்று கூறினார்.