சரிவில் இருந்து மீட்ட திலக் வர்மா...மும்பை 171 ரன்கள் குவிப்பு...!
|மும்பை இந்தியன்ஸ் தரப்பில் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா 84 ரன்கள் அடித்தார்.
பெங்களூரு,
16-வது ஐபிஎல் தொடர் கடந்த 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்துக்கான டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் மற்றும் இஷன் கிஷன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் இஷன் கிஷன் 10 ரன், ரோகித் 1 ரன், அடுத்து களம் இறங்கிய கேமரூன் க்ரீன் 5 ரன், சூர்யகுமார் யாதவ் 15 ரன் எடுத்த நிலையில் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதனால் அந்த அணி 48 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து களம் இறங்கிய திலக் வர்மா மற்றும் நேகால் வதேரா ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் அதிரடியாக ஆடிய வதேரா 21 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதையடுத்து திலக் வர்மாவுடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். இதில் டேவிட் 4 ரன்னில் வீழ்ந்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா 32 பந்தில் அரைசதம் அடித்தார்.
இறுதி வரை களத்தில் நின்ற திலக் வர்மா 46 பந்தில் 84 ரன்கள் குவித்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. இதையடுத்து 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு ஆட உள்ளது.