< Back
கிரிக்கெட்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி 20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு - புதுமுக வீரராக திலக் வர்மா சேர்ப்பு

கோப்புப்படம்

கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி 20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு - புதுமுக வீரராக திலக் வர்மா சேர்ப்பு

தினத்தந்தி
|
6 July 2023 9:31 AM IST

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விளையாடும் இந்திய அணியில் புதுமுக வீரராக திலக் வர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், மூன்று ஒரு நாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 12-ந்தேதி டொமினிகாவில் தொடங்குகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் ஆடும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஆடும் இந்திய அணி நேற்றிரவு தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி 20 ஓவர் அணிக்கான கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தொடருகிறார். மூத்த வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி மீண்டும் ஒரு முறை தேர்வு செய்யப்படவில்லை. இதன் மூலம் அவர்களை குறுகிய வடிவிலான போட்டிகளில் இருந்து ஓரங்கட்டுவது போல் தெரிகிறது. ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் இடம் பெறவில்லை.



திலக் வர்மா

ஐதராபாத்தை சேர்ந்த இடக்கை பேட்ஸ்மேன் 20 வயதான திலக் வர்மா புதுமுக வீரராக தேர்வாகியுள்ளார். இவர் இந்த சீசனில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிரடியாக (11 ஆட்டத்தில் 343 ரன்) விளையாடியது குறிப்பிடத்தக்கது. சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய், வேகப்பந்து வீச்சாளர் அவேஷ்கான் அணிக்கு திரும்பியுள்ளனர். தீபக் ஹூடா, ருதுராஜ் கெய்க்வாட், வாஷிங்டன் சுந்தர், பிரித்வி ஷா உள்ளிட்டோரின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை.

இந்திய 20 ஓவர் போட்டி அணி வருமாறு:- இஷான் கிஷன், சுப்மன் கில், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), அக்ஷர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக், அவேஷ்கான், முகேஷ் குமார்.

இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் மூன்று 20 ஓவர் போட்டிகளிலும், மீதமுள்ள 2 ஆட்டங்களை அமெரிக்காவிலும் விளையாட உள்ளது. முதலாவது 20 ஓவர் போட்டி ஆகஸ்டு 3-ந்தேதி டிரினிடாட்டில் நடக்கிறது.

மேலும் செய்திகள்