சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே-வின் கடைசி லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.!
|சென்னை- கொல்கத்தா அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் மே 14-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
சென்னை,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மே 14-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
இந்நிலையில், இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி, டி, இ கீழ்தளம்) டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது.
பெண்கள் தனி வரிசையில் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கிச்செல்கின்றனர். ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைக்கான டிக்கெட்டுகளை கவுண்ட்டரிலும், PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணைய தளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.
ரூ.3,000, ரூ.5,000 விலைக்குரிய டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே விற்கப்படும். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாற்று திறனாளிகள், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் காலை 10.30 முதல் 11 மணி வரை டிக்கெட்டுகளை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.