அந்த போட்டிகள் இனி இந்தியாவில் நடைபெறாது - ஜெய்ஷா அறிவிப்பு
|இந்தியாவில் இதுவரை 3 பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
மும்பை,
டெஸ்ட் போட்டிகளில் சுவாரஸ்யத்தை கூட்ட கடந்த 2012-ம் ஆண்டு பகலிரவு டெஸ்ட் போட்டிகளை ஐ.சி.சி. அறிமுகப்படுத்தியது. இதில் இந்தியா இதுவரை 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது. இந்தியாவில் இதுவரை 3 பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில் பிசிசிஐ-யின் செயலாளரான ஜெய் ஷா இந்தியாவில் இனி பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்தப் போவதில்லை என்று அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்கான காரணம் கூறித்து ஜெய்ஷா கூறுகையில், "பகலிரவு டெஸ்ட் போட்டிகளை காண்பதற்கான டிக்கெட்டுகளை ஐந்து நாட்களுக்கும் சேர்த்துதான் ரசிகர்கள் விலைக்கு வாங்குகின்றனர். ஆனால் போட்டி இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிந்து விடுகிறது. பகலிரவு டெஸ்ட் போட்டிகள் எப்போதுமே குறைந்த நாட்களில் முடிவதால் ரசிகர்களுக்கு அந்த மீதி உள்ள நாட்களுக்கான டிக்கெட் பணத்தை எங்களால் திருப்பிக் கொடுக்க முடியாது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். ரசிகர்களின் நலனுக்காகவே பகலிரவு போட்டிகளை நடத்தப் போவதில்லை" என்று கூறியுள்ளார்.
முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற மூன்று பகலிரவு போட்டிகளுமே 3 நாட்களை தாண்டவில்லை. இதன் காரணமாகவே ஜெய்ஷா இந்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்திய அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அங்கு ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.