< Back
கிரிக்கெட்
விராட் மற்றும் ரோகித் இடத்தை நிரப்ப அந்த 2 வீரர்கள் தயார் - இந்திய முன்னாள் வீரர் கருத்து
கிரிக்கெட்

விராட் மற்றும் ரோகித் இடத்தை நிரப்ப அந்த 2 வீரர்கள் தயார் - இந்திய முன்னாள் வீரர் கருத்து

தினத்தந்தி
|
15 July 2024 2:57 AM GMT

ரோகித் மற்றும் விராட் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டனர்.

மும்பை,

சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் தனது முதல் ஆட்டத்தில் தோல்வி கண்ட இந்திய அணி அதன் பிறகு அடுத்த 4 ஆட்டங்களிலும் வரிசையாக வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

முன்னதாக இந்த தொடரின் 4வது போட்டியில் ஜிம்பாப்வே நிர்ணயித்த 153 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 93 ரன்களும் சுப்மன் கில் 58 ரன்களும் விளாசி 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றியை பெற்றுகொடுத்தனர்.

இந்நிலையில் அதிரடியாக விளையாடும் ஸ்டைலை கொண்ட ஜெய்ஸ்வால் நிதானமாக விளையாடும் ஸ்டைலை கொண்ட கில் ஆகியோர் டி20 அணியில் ரோகித், விராட் கோலியின் இடத்தை நிரப்ப தயாராக உள்ளதாக இந்திய முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"டி20 கிரிக்கெட்டில் தற்போது அதிரடியான விளையாட்டை இந்திய அணியும் முன்னோக்கி எடுத்து வந்துள்ளது. இது இந்திய அணிக்கும் தேர்வாளர்களுக்கும் சிறப்பான செய்தி. முதல் போட்டியில் தோற்றாலும் இந்தியா அங்கிருந்து வலுவான கம்பேக் கொடுத்தது. ஜெய்ஸ்வால் - கில் ஆகியோர் கடைசி வரை அவுட்டாகாமல் பார்ட்னர்ஷிப் அமைத்ததையும் அவர்கள் இடது - வலது கை ஜோடியாக இருப்பதையும் நாம் அடிக்கடி பேசி வருகிறோம்.

உங்கள் முன்னே தற்போது 2 இடங்கள் காலியாக உள்ளன. ரோகித், விராட் ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் விளையாடப் போவதில்லை. எனவே இந்த வீரர்களும் அந்த இடத்திற்கு தயாராக இருப்பதாக நான் கருதுகிறேன். அதே போல இன்னும் சில வீரர்களும் தயாராக உள்ளனர். எனவே அவர்களில் சிறந்தவரை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது தேர்வாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இளம் வீரர்கள் சீனியர் அணியை போலவே அதிரடியாக பேட்டிங் செய்து தொடரை வென்று காட்டியுள்ளனர்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்