இந்த இளம் வீரர் இந்தியாவின் வருங்கால கேப்டனாக வாய்ப்பு உள்ளது - இந்திய முன்னாள் வீரர்
|இந்திய கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் ரோகித், கோலி, பாண்ட்யா, ஜடேஜா, கில் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக ஜெய்ஸ்வால், ருதுராஜ், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே போன்ற இளம் வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் வருங்கால கேப்டனாக செயல்பட இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய முன்னாள் வீரர் கிரண் மோர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
ருதுராஜ் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவதற்காக நான் காத்திருக்கிறேன். ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய இருவருமே நல்ல திறமையை கொண்ட வீரர்கள். அதில் ருதுராஜ் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் தன்மையைக் கொண்டவர்.
ஏனெனில் அவருடைய அடிப்படை டெக்னிக் மிகவும் சரியாக இருக்கிறது. அத்துடன் அவர் வருங்காலங்களில் இந்தியாவின் கேப்டனாக செயல்படும் அளவுக்கு சிறந்த பொறுமையான குணத்தை கொண்டுள்ளார்.
குறிப்பாக எம்எஸ் தோனி தலைமையில் விளையாடியுள்ள அவர் அணியை எவ்வாறு கட்டுப்படுத்துவது, கடினமான சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிப்பது போன்ற கேப்டன்ஷிப் அம்சங்களை நிச்சயமாக கற்று கொண்டிருப்பார். எனவே நல்ல தரமான வீரரான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்புக்காக நான் காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.