< Back
கிரிக்கெட்
பந்துவீச்சாளர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற இதை செய்ய வேண்டும் இல்லையெனில்... - அனில் கும்ப்ளே

கோப்புப்படம்

கிரிக்கெட்

பந்துவீச்சாளர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற இதை செய்ய வேண்டும் இல்லையெனில்... - அனில் கும்ப்ளே

தினத்தந்தி
|
17 May 2024 9:27 AM IST

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மும்பை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

மீதமுள்ள ஒரு இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறின.

நடப்பு ஆண்டு ஐ.பி.எல் தொடரில் எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் நிறைய சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஐ.பி.எல் தொடரின் முதல் பாதியில் பந்துவீச்சாளர்கள் பெரிய சிரமத்தை சந்தித்தார்கள். அனைத்து அணிகளும் மிக எளிதாக 200 முதல் 250 ரன்கள் வரை அடித்தன.

ஐ.பி.எல் தொடரில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இந்த ஆண்டு பதிவானது. எல்லா அணியில் இருந்த பந்துவீச்சாளர்களும் என்ன செய்வது என தெரியாமல் மைதானத்தில் தடுமாறி நின்றார்கள். பந்துவீச்சாளர்களை பாதுகாக்க வேண்டும், பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ப சில விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என சமூக வலைதளத்தில் நிறைய விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேசியிருக்கும் இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே கூறியதாவது, இந்த வருட ஐ.பி.எல் தொடர் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்துள்ளது. குறிப்பாக ஐ.பி.எல் தொடரின் முதல் பாதி மிகுந்த சிரமத்தை கொடுத்தது. பந்துவீச்சாளர்களை பாதுகாக்க சில மாற்றங்களை செய்ய வேண்டும். இந்தியாவில் இருக்கும் எல்லா மைதானத்தின் எல்லைகளும் அதிகரிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மைதானத்திலும் பவுண்டரி எல்லையை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். இதற்கு முதல் கட்டமாக, பவுண்டரி எல்லையை ஒட்டி அணியினர் அமர்ந்திருக்கும் டக் அவுட்டை நீங்கள் மைதானத்தில் ரசிகர்கள் இருக்கும் பகுதிக்கு நகர்த்தலாம். மேலும் பந்தின் தையல் கொஞ்சம் பெரிதாக இருக்கும் படி பார்த்துக் கொள்வது, பந்தில் கொஞ்சம் அசைவு இருப்பதற்கு உதவி செய்யும்.

தற்பொழுது ஒரு சில ஓவர்களுக்குப் பிறகு பந்து ஸ்விங் ஆவது நின்று விடுவதை நாம் பார்த்து வருகிறோம். பேட்டுக்கும், பந்துக்கும் நடுவில் சம நிலையான போட்டி தேவைப்படுகிறது. எனவே நாம் இத்தகைய மாற்றங்களை செய்தாக வேண்டும். இல்லையென்றால் சில காலம் கழித்து இந்தியாவில் பந்து வீச இளைஞர்கள் அணிவகுத்து நிற்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்