< Back
கிரிக்கெட்
இந்த சல்யூட் என்னுடைய ராணுவ தந்தைக்கானது -  துருவ் ஜூரல் நெகிழ்ச்சி

image courtesy: PTI

கிரிக்கெட்

இந்த சல்யூட் என்னுடைய ராணுவ தந்தைக்கானது - துருவ் ஜூரல் நெகிழ்ச்சி

தினத்தந்தி
|
28 April 2024 8:51 AM IST

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் துருவ் ஜூரல் அரைசதம் அடித்து அசத்தினார்.

லக்னோ,

10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் தீபக் ஹூடாவின் அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 196 ரன்கள் குவித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ, சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரலின் அரைசதத்தின் மூலம் 19 ஓவர்களில் இலக்கை கடந்து வெற்றி பெற்றது.

முன்னதாக கடந்த வருடம் ராஜஸ்தான் அணியில் கிடைத்த வாய்ப்பில் அசத்திய துருவ் ஜூரல் சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமானார். அதில் அரை சதமடித்தபோது ராணுவத்தில் பணியாற்றிய தம்முடைய தந்தைக்காக அவர் சல்யூட் அடித்து மரியாதை கொடுத்தார். அதேபோல இப்போட்டியிலும் 50 ரன்கள் கடந்தபோது அவர் சல்யூட் அடித்து தந்தைக்கு மரியாதை செய்தார்.

இந்நிலையில் தம்முடைய தந்தைக்காகவே கிரிக்கெட்டில் விளையாடுவதாக தெரிவிக்கும் ஜூரல் முக்கிய நேரத்தில் அவசரப்படாமல் விளையாடுமாறு கேப்டன் சஞ்சு சாம்சன் ஐடியா கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போட்டியை பினிஷிங் செய்ய விரும்புகிறேன். அதனால் கடைசி வரை நின்று என்னுடைய அணிக்காக போட்டியை பினிஷிங் செய்ய விரும்புகிறேன். பவர் பிளேவில் 2 பீல்டர்கள் மட்டுமே வெளியே இருப்பார்கள். மிடில் ஓவர்களில் 5 பேர் வெளியே இருப்பார்கள். எனவே அதற்கு தகுந்தாற்போல் பயிற்சிகளை செய்கிறேன். பேட்டிங்கில் நன்றாக துவங்கியும் நான் அடித்த ஷாட்டுகள் கைகளுக்கு சென்றது.

அப்போது கடினமாக அடிக்காமல் அமைதியாக பொறுமையுடன் விளையாடுமாறு சஞ்சு சாம்சன் என்னிடம் சொன்னார். அதனால் நேரம் எடுத்து விளையாடிய நான் ஒரே ஓவரில் 20 ரன்கள் அடித்து பின்னர் அப்படியே விளையாடினேன். நான் எப்போதும் என்னுடைய தந்தைக்காக விளையாடுகிறேன். டெஸ்ட் போட்டிகளின்போது அவருக்காக சல்யூட் செய்தேன். அவர் இந்திய ராணுவத்தில் வேலை செய்தவர். இன்றைய சல்யூட் மைதானத்தில் இருந்த அவருக்கானது" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.


மேலும் செய்திகள்