ஆசிய கோப்பையில் இந்த வீரர் தான் அதிக ரன்கள் அடிப்பார் - இந்திய வீரரை குறிப்பிட்ட ரஷித் கான்
|ஆசிய கோப்பையில் இந்த வீரர் தான் அதிக ரன்கள் அடிப்பார் என இந்திய வீரரை ரஷித் கான் குறிப்பிட்டுள்ளார்.
துபாய்,
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நடக்கிறது. இதில் பங்கேற்கும் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 4 சுற்றுக்கு வரும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பெறும் அணிகள் இறுதி போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் ஆசிய கோப்பையில் சூர்ய குமார் யாதவ் அதிக ரன்களை அடிப்பார் என ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது யு-டியூப் சேனலில் கூறியுள்ளதாவது,
சூர்ய குமார் யாதவ் ஒரு துணிச்சலான வீரர். அவர் இந்திய அணிக்காகவும், ஐபிஎல் அணிக்காகவும் சிறப்பாக ஆடி வருகிறார். அவர் தனது ஒட்டுமொத்த திறமையையும் வெளிப்படுத்தி வருகிறார். ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் அடிக்கும் வீரராக இருப்பார். அவர் மைதானத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்.
சூர்ய குமார் யாதவ் தான் ஆடும் அணிக்காக எப்போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என நினைக்கிறார். ஐபிஎல்லில் அவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினமாக இருந்தது. அவர் இந்தியாவுக்காக களம் இறங்கும்போது அவருக்கு பந்துவீசுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.