பாகிஸ்தான் கேப்டனாக பொறுப்பேற்க இந்த வீரர் தயாராக இருக்கிறார் - ஹசன் அலி
|பாகிஸ்தான் அணியின் கேப்டனாக தற்போது பாபர் ஆசம் செயல்பட்டு வருகிறார்.
கராச்சி,
அனைத்து வகையிலான கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக தற்போது பாபர் ஆசம் செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையின் கீழ் பாகிஸ்தான் அணி கடந்த டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்று அசத்தியது. மேலும் ஆசிய கோப்பையிலும் இறுதிப்போட்டி வரை சென்றது.
ஆனால் அதேவேளையில் சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கடுமையாக போராடி தோல்வியின் விளிம்பில் இருந்து தப்பித்தது. இந்த தொடர் தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் கேப்டனான பாபர் ஆசமை மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. கேப்டன் பொறுப்பால் அவரால் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை என கருத்துக்கள் வந்தன.
அதேவேளையில் கேப்டன் பொறுப்பால் எனது பேட்டிங்கில் தொய்வு ஏற்படவில்லை என பாபர் ஆசம் கூறியிருந்தார். தற்போது பாகிஸ்தானில் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பொறுப்பேற்க ஷதாப் கான் தயாராக இருக்கிறார் என பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,
பாகிஸ்தான் கேப்டனாக பொறுப்பேற்க ஷதாப் கான் தயாராக உள்ளார். தன்னால் கேப்டன் பொறுப்பை கவனிக்க முடியும் என பிஎஸ்எல்லில் நிரூபித்து காட்டி உள்ளார். பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இரண்டு போட்டிகளில் செயல்பட்டுள்ளார், எனவே அவர் தயாராக உள்ளார். அவர் எப்போதும் சவாலுக்காக தயாராக உள்ளார் மேலும் அவர் சிறந்த முடிவுகளை தருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.