இதனால்தான் நடராஜன் துலீப் கோப்பையில் விளையாட தேர்வாகவில்லை - அஸ்வின் கருத்து
|துலீப் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட நடராஜன் தேர்வாகவில்லை.
சென்னை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) தொடர் செப்டம்பர் -5ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான அணி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஏ' அணிக்கு சுப்மன் கில், 'பி' அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன், 'சி' அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், 'டி' அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், சாய் சுதர்சன், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் விளையாடுகிறார்கள். கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின் ஆகியோருக்கு இந்த போட்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் விளையாட தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது . ஏனெனில் டிஎன்பிஎல் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்திய அவர் 2020/21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் நெட் பவுலராக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முக்கிய வீரர்கள் காயமடைந்ததால் நடராஜனுக்கு 3 வகையான இந்திய அணியிலும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நன்றாகவே செயல்பட்ட அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.
இருப்பினும் அதன் பின் காயத்தை சந்தித்த அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் அதன் பின் குணமடைந்து 3 வருடங்களாகியும் அவருக்கு மறு வாய்ப்பு கொடுக்காத தேர்வுக்குழு தற்போது சாதாரண உள்ளூர் தொடரான துலீப் கோப்பையில் கூட கழற்றி விட்டுள்ளது.
இந்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்த நடராஜன் கடந்த 3 வருடங்களாக ரஞ்சிக்கோப்பை போன்ற உள்ளூர் டெஸ்ட் தொடர்களில் விளையாடவில்லை என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். அதனாலேயே தற்போது துலீப் கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அஸ்வின் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நடராஜன் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அற்புதமான பவுலர் என்று நான் கருதுகிறேன். இந்த வருடம் ஐபிஎல் தொடரிலும் அவர் நன்றாக விளையாடினார். இருப்பினும் கடைசியாக அவர் முதல் தர போட்டியில் 2021 ஜனவரி மாதம் 15-ம் தேதி பிரிஸ்பேன் (கபா) நகரில் விளையாடினார். அதன் பின் கடந்த 3 வருடங்களாக அவர் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடவில்லை.
தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் நடராஜன் உடைந்தார். நாம் அவருக்கு அதிக ஆதரவு கொடுக்கிறோம். நானும் நடராஜனை அதிகமாக விரும்புகிறேன். அவர் நல்ல பையன். ஆனால் அதை அடிக்கடி சொல்ல மாட்டேன். உண்மையில் நடராஜன் உள்ளூர் சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்காக விளையாடியிருந்தால் இங்கு நிச்சயம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்று நான் கூறுவேன்" என கூறினார்.