இதனால்தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டவில்லை - நடராஜன் விளக்கம்
|காபா டெஸ்ட் போட்டிக்கு பின் தம்முடைய முழங்காலில் பெரிய காயம் ஏற்பட்டதாக நடராஜன் கூறியுள்ளார்.
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர், தமிழகத்தை சேர்ந்த நடராஜன். டிஎன்பிஎல் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்திய அவர் 2020/21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் நெட் பவுலராக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முக்கிய வீரர்கள் காயமடைந்ததால் நடராஜனுக்கு 3 வகையான இந்திய அணியிலும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நன்றாகவே செயல்பட்ட அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.
இருப்பினும் அதன் பின் காயத்தை சந்தித்த அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் அதன் பின் குணமடைந்து 3 வருடங்களாகியும் அவருக்கு மறு வாய்ப்பு கொடுக்காத தேர்வுக்குழு தற்போது சாதாரண உள்ளூர் தொடரான துலீப் கோப்பையில் கூட கழற்றி விட்டுள்ளது.
அதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தை (பிசிசிஐ) தமிழக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் 2021 காபா டெஸ்ட் போட்டிக்கு பின் தம்முடைய முழங்காலில் பெரிய காயம் ஏற்பட்டதாக நடராஜன் கூறியுள்ளார். அதனால் கடந்த 3 வருடங்களாக உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட தாம் விளையாடவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அதனாலேயே தமக்கு துலீப் கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கும் நடராஜன் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டில் நான் விளையாடி கிட்டத்தட்ட 4 வருடங்களாகி விட்டது. அதற்காக நான் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட விரும்பவில்லை என்று அர்த்தமில்லை. இருப்பினும் அதில் விளையாடுவதால் எனது பணிச்சுமை அதிகமாகிறதாக உணர்கிறேன். அதனால் தற்போது நான் சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டை தவிர்க்கிறேன். ஏனெனில் அதிகமாக விளையாடும்போது எனது முழங்காலில் அதிக பணிச்சுமை ஏற்படுகிறது.
அதனாலேயே அதில் விளையாடுவதை நான் நிறுத்தியுள்ளேன். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டை விட டெஸ்ட் கிரிக்கெட்டை நான் அதிகமாக விரும்புகிறேன். தற்போதைய திட்டங்கள் இப்படியே சென்று நல்ல பயிற்சிகளை எடுத்தால் இன்னும் சில வருடங்களில் நான் மீண்டும் சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டுக்கு திரும்புவேன். ஆனால் தற்போதைய நிலைமை நான் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்" என்று கூறினார்.