< Back
கிரிக்கெட்
இந்த போட்டியில் தோல்விக்கு காரணமாக அமைந்தது இது தான் -  பிளெஸ்சிஸ் பேட்டி

Image Courtesy: Twitter 

கிரிக்கெட்

இந்த போட்டியில் தோல்விக்கு காரணமாக அமைந்தது இது தான் - பிளெஸ்சிஸ் பேட்டி

தினத்தந்தி
|
3 April 2024 10:01 AM IST

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி லக்னோ வெற்றி பெற்றது.

பெங்களூரு,

ஐ.பி.எல் தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் டிகாக் 81 ரன், பூரன் 40 ரன் எடுத்தனர்.

இதையடுத்து 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி லக்னோவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 19.4 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த பெங்களூரு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 28 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக லோம்ரோர் 33 ரன்கள் எடுத்தார். லக்னோ தரப்பில் அதிவேக பந்துவீச்சை வெளிப்படுத்திய மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் மயங்க் யாதவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த போட்டியில் நாங்கள் தவறவிட்ட கேட்ச்கள் தான் தோல்விக்கு காரணமாக அமைந்தது என பெங்களூரு கேப்டன் பிளெஸ்சிஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக போட்டி முடிந்த பின்னர் பிளெஸ்சிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்த போட்டியில் நாங்கள் தவறவிட்ட கேட்ச்கள் தான் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக இரண்டு முக்கிய வீரர்களின் எளிதான கேட்சை நாங்கள் தவறவிட்டோம். குவிண்டன் டி காக் 25 முதல் 30 ரன்கள் வரை இருக்கும் போதும், நிக்கோலஸ் பூரான் 2 ரன்களில் இருக்கும்போதும் கேட்சை தவறவிட்டோம்.

அதன் விளைவாக அவர்கள் 60 முதல் 65 ரன்கள் வரை அதிகமாக குவித்து விட்டார்கள். இதுபோன்ற தவறுகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டோம். மாயங்க் யாதவுடைய ஆக்சன் புதிதாக இருப்பதனால் அவரை எதிர்கொள்வது சிரமமாக இருக்கிறது. இவ்வளவு வேகத்திலும் அவர் லைன் மற்றும் லெந்த்தை கண்ட்ரோல் செய்து அற்புதமாக வீசுகிறார்.

இந்த போட்டியில் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்று உணர்கிறேன். ஏனெனில் போட்டியின் ஆரம்பத்திலேயே அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர். பின்னர் மேக்ஸ்வெல் சிறப்பாக பந்துவீசி கட்டுக்குள் கொண்டு வந்தாலும் இறுதி கட்டத்தில் மீண்டும் ரன்கள் சென்று விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்