பார்ட்னர்ஷிப் அமைத்தபோது அஸ்வினிடம் நான் கூறியது இதுதான் - ஜடேஜா பேட்டி
|சதத்தை தவற விட்டாலும் தனது 300வது டெஸ்ட் விக்கெட்டை எடுப்பேன் என்று ஜடேஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 91.2 ஓவர்களில் 376 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அஸ்வின் 113 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும் குவித்தனர். வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஹசன் மக்மூத் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் முதல் இன்னிங்சில் வெறும் 149 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 32 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளும், சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் அடித்துள்ளது. கில் 33 ரன்களுடனும், பண்ட் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இதுவரை 308 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் சதத்தை தவற விட்டாலும் தனது 300வது டெஸ்ட் விக்கெட்டை எடுப்பேன் என்று ரவீந்திர ஜடேஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அஸ்வினுடன் சேர்ந்து 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முதல் இன்னிங்சில் இந்தியாவை மீட்டெடுத்த திட்டம் பற்றியும் அவர் பேசியது பின்வருமாறு:-
"இன்று நான் அவுட்டானது போட்டியின் ஒரு அங்கம். இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் நல்ல ஸ்கோர் அடிக்க வேண்டும். என்னுடைய பந்து வீச்சில் மகிழ்ச்சி. இந்த மைதானத்தில் எனது 300வது விக்கெட்டை எடுக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. இங்கிருந்து இன்னும் 120 - 150 ரன்கள் அடித்து பின்னர் வங்காளதேசத்தை முடிந்தளவுக்கு வேகமாக அவுட் செய்ய முயற்சிப்போம். பிட்ச் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருக்கிறது. அதே சமயம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் உதவி இருக்கிறது.
அஸ்வினுக்கு நான் எந்த ஆலோசனையும் சொல்லத் தேவையில்லை. நாம் எந்த தவறும் செய்யக்கூடாது என்றுதான் அவரிடம் சொன்னேன். ஏனெனில் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்தோம். நாம் சிங்கிள்களை எடுப்போம் உங்களை அதிகமாக ஓட விட மாட்டேன் என்றும் அஸ்வினிடம் சொன்னேன். அவர் தனது சொந்த ஊரில் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினார். இந்த பிட்ச்சில் வேகப்பந்து வீச்சளார்கள் மற்றும் ஸ்பின்னர்களுக்கு உதவி இருக்கிறது. சில பந்துகள் சுழல்கிறது சில பந்துகள் கீழே வருகிறது" என்று கூறினார்.