19வது ஓவரை ரிங்கு சிங் வீச இதுதான் காரணம் - விளக்கம் அளித்த சூர்யகுமார் யாதவ்
|நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் 19வது ஓவரை ரிங்கு சிங் வீசினார்.
பல்லகெலே,
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலன 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இலங்கை 15.2 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 117 ரன்கள் எடுத்து வெற்றி பெறும் நிலையில் இருந்தது.
ஆனால், அதன் பின் சிறப்பாக பந்துவீசிய இந்திய வீரர்கள் இலங்கையின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர். இதனால் இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 137 ரன்களே எடுத்தது. இதன் காரணமாக வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீசினார். இந்த சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இந்தியா பந்துவீசிய போது 19வது ஓவரை ரிங்கு சிங்கும், 20வது ஓவரை சூர்யகுமார் யாதவும் வீசினர். இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த நிலையில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் 19வது ஓவரை ரிங்கு சிங்கை வீச வைக்க காரணம் என்ன என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, எப்போதும் 20வது ஓவரை விட 19-வது ஓவர்தான் ஆட்டத்தின் கடினமான பகுதி. சிராஜ் மற்றும் சிலரது ஓவர்கள் மீதம் இருந்தது. இருந்தாலும் அந்த விக்கெட்டுக்கு ரிங்கு சிங் பொருத்தமாக இருப்பார் என்று நான் உணர்ந்தேன். அதனாலேயே அவரிடம் 19வது ஓவரை வீச பந்தை கொடுத்தேன்.
ஏனென்றால் அவர் பயிற்சிகளின் போது சிறப்பாக பந்து வீசி இருக்கிறார். அதனால்தான் நான் அந்த முடிவை எடுத்து அவருக்கு ஓவரை கொடுத்தேன். மேலும் இந்திய கிரிக்கெட்டுக்கு 19-வது ஓவர் எப்போதுமே கஷ்டம் என்று தெரியும். அதனால்தான் ரிங்குவிடம் அந்த பொறுப்பை கொடுத்தேன்.
இடது கை பேட்ஸ்மேனுக்கு, வலது கை பந்துவீச்சாளர் எப்போதுமே கடினமாக இருப்பார். எனக்கு மேலும் ஒரு பந்துவீச்சு ஆப்ஷன் இருந்ததால் அவர் தனது திறமையை பயன்படுத்தி 20வது ஓவரை வீச எனது வேலையை எளிதாக்கினார். இவ்வாறு அவர் கூறினார்.