< Back
கிரிக்கெட்
தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் வெற்றி பெற இதுதான் காரணம் - ரிஷப் பண்ட்
கிரிக்கெட்

தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் வெற்றி பெற இதுதான் காரணம் - ரிஷப் பண்ட்

தினத்தந்தி
|
25 April 2024 10:14 AM IST

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி பெற்றது.

புதுடெல்லி,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்சும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்சும் மோதின. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கேப்டன் ரிஷப் பண்ட் - அக்சர் படேல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இவர்களின் அதிரடியால் டெல்லி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 88, அக்சர் படேல் 66 ரன்கள் எடுத்தனர். குஜராத் சார்பில் அதிகபட்சமாக சந்திப் வாரியர் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 220 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. டெல்லி அணியின் இந்த வெற்றிக்கு 84 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ரிஷப் பண்ட் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். குறிப்பாக மொகித் சர்மா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 2, 6, 4, 6, 6, 6 என 30 ரன்கள் அடித்த அவர் வெற்றியில் முக்கிய பங்காற்றி முழுமையான பார்முக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் தொடக்கத்தில் 44 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து சரிவை சந்தித்தபோது ரஷித் கான் போன்ற குஜராத்தின் முதன்மை ஸ்பின்னர்களை அட்டாக் செய்யும் திட்டத்தை கையில் எடுத்ததாக ரிஷப் பண்ட் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"டி20 என்பது மிகவும் வேடிக்கையான விளையாட்டு. 14 - 15 ஓவர்கள் முடிந்ததும் பந்து நன்றாக வந்தது. எனவே ரசிக் தார் சலாம் மீது நம்பிக்கையை வைக்க விரும்பினோம். ஒரு போட்டியில் நன்றாக பந்து வீசும் ஒருவரை நாங்கள் எப்போதும் நம்புவோம். அதனாலேயே அவரை 19-வது ஓவரில் பயன்படுத்தினேன். இது போன்ற விஷயங்கள் கேப்டனாக உங்களுடைய உள்ளுணர்வில் கிடைக்கும். அது இன்று வேலை செய்ததில் மகிழ்ச்சி. கண்டிப்பாக 44/3 என சரிந்தபோது தொடர்ந்து விளையாடி அவர்களுடைய முதன்மை ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய திட்டமாகும்.

அதைப் பின்பற்றி ஸ்ட்ரைக்கை மாற்றினால் எங்களால் முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சித்தோம். ஒவ்வொரு நாளும் களத்தில் நான் நன்றாக உணர்கிறேன். களத்தில் ஒவ்வொரு மணி நேரமும் இருப்பதை விரும்பும் நான் 100 சதவீதம் பங்களிப்பை கொடுக்க விரும்புகிறேன். அதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். முதல் சிக்சர் அடித்ததும் எனக்கு தன்னம்பிக்கை கிடைத்தது" என்று கூறினார்

மேலும் செய்திகள்