< Back
கிரிக்கெட்
ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க காரணம் இதுதான் - டிராவிட்
கிரிக்கெட்

ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க காரணம் இதுதான் - டிராவிட்

தினத்தந்தி
|
7 Sept 2024 2:26 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிகச் சிறப்பான பணியை இவர் செய்து வந்துள்ளார். டிராவிட் தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு ஐ.சி.சி. தொடர்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தாலும் கோப்பைகளை வெல்ல முடியவில்லை என்ற குறை நீடித்து வந்தது. அந்த குறையையும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வந்தது. வெற்றிகரமாக பயிற்சியாளராக தனது பயணத்தை முடித்து இந்திய அணியில் இருந்து வெளியேறி உள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக செய்ய முடியாத சாதனையை, பயிற்சியாளராக செய்து ராகுல் டிராவிட் அசத்தியுள்ளார். 2007-ல் ஒருநாள் உலகக்கோப்பையில் தோல்வியை சந்தித்த அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இம்முறை டிராவிட் பயிற்சியாளராக டி20 உலகக்கோப்பையை வென்று அசத்தினார்.

அதோடு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அவரை ஐ.பி.எல். அணிகள் பயிற்சியாளராக நியமிக்க அனுகியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படுவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே 2012, 2013 ஐபிஎல் தொடர்களில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக டிராவிட் விளையாடினார். மேலும் 2014, 2015 வருடங்களில் ராஜஸ்தான் அணியின் இயக்குனர் மற்றும் ஆலோசகராகவும் டிராவிட் செயல்பட்டுள்ளார்.

அந்த வகையில் ராஜஸ்தானுக்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு இருக்கிறது. அதனாலேயே கொல்கத்தாவை தாண்டி ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் ஜாக் மற்றும் இயக்குனர் குமார் சங்ககாரா ஆகியோர் கேட்டதும் பயிற்சியாளர் பதவியில் செயல்பட ஒப்புக்கொண்டதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

இது பற்றி ராகுல் டிராவிட் பேசியது பின்வருமாறு:- "கடந்த காலங்களில் என்னுடைய வீடு என்றழைத்த ஐபிஎல் அணிக்கு மீண்டும் வந்துள்ளது நல்ல உணர்வைக் கொடுக்கிறது. உலகக்கோப்பைக்கு பின் மற்றொரு சவாலை எடுத்துக்கொள்ள இது சரியான நேரம் என்று நான் கருதுகிறேன். அதைச் செய்வதற்கு ராஜஸ்தான் எனக்கு சரியான இடமாகும். கடந்த சில வருடங்களாக மனோஜ், ஜேக், குமார் சங்ககாரா ஆகியோர் இந்த அணி வளர்வதில் கடின உழைப்பை கொடுத்துள்ளனர். எங்களிடம் உள்ள திறமைகள் மற்றும் வளங்களின் அடிப்படையில் இந்த அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இது ஒரு உற்சாகமான வாய்ப்பாகும். அதை தொடங்குவதற்காக காத்திருக்கிறேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்