இந்தியா ஏ அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமிக்க காரணம் இதுதான் - பாக். முன்னாள் வீரர்
|இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஏற்பட்ட அழுத்தத்தால் சஞ்சு சாம்சன் இந்திய ஏ அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. அணியில் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உலக கோப்பை அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறாததற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் தினேஷ் கனேரியா சஞ்சு சாம்சனை உலக கோப்பை அணியில் சேர்க்காததால் ஏற்பட்ட அழுத்தத்தால் இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை இந்தியா ஏ அணிக்கு கேப்டனாக நியமித்துள்ளார் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது,
சஞ்சு சாம்சனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் அஸ்திரேலிய பிட்ச்களில் மிகச்சிறப்பாக விளையாடக் கூடியவர். சஞ்சு சாம்சன் பேட்டிங் ஆடும் விதம் ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு மிக பயன் உள்ளதாக இருக்கும். சஞ்சு சாம்சன் இப்போது நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு இந்திய ஏ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலக கோப்பைக்கு சஞ்சு சாம்சனை தேர்வு செய்யாததால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஏற்பட்ட அழுத்தத்தினால் அவரை இந்திய ஏ அணிக்கு கேப்டனாக நியமித்துள்ளதாக தெரிகிறது என கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், எந்த வகையான தேசிய அணிக்கு கேப்டனாக செயல்பட்டாலும் அது பெருமை. இது சஞ்சு சாம்சனுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இந்திய ஏ அணியின் கேப்டனாக அவர் இந்த தொடரை வென்று கொடுத்தால் அது மிகச்சிறபாக இருக்கும் என்றார்.