இது தான் டி20 கிரிக்கெட்டின் அழகாகும் - வெற்றிக்கு பின் புவனேஷ்வர் குமார் பேட்டி
|இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த நிதிஷ் ரெட்டிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
முல்லன்பூர்,
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டம் முல்லன்பூரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிரடியாக ஆடிய நிதிஷ் ரெட்டி 64 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் முலம் 2 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த நிதிஷ் ரெட்டிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 32 ரன் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்த பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
இது தான் டி20 கிரிக்கெட்டின் அழகாகும். பிட்ச் கடைசி 2 ஓவரில் பேட்டிங்க்கு அதிக சாதகமாக மாறியது. அதனால் நகத்தை கடிக்கும் அளவுக்கு சென்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது நல்லது. தவான் இறங்கி வர முயற்சித்ததால் நான் கிளாசெனை ஸ்டம்புக்கு அருகில் வந்து நிற்க சொன்னேன்.
கடைசியாக புனே அணிக்காக விளையாடிய போது ஸ்டம்பிங் முறையில் விக்கெட் எடுத்தேன் என்று நினைக்கிறேன். இவை அனைத்தும் நீங்கள் அதே விஷயங்களை எப்படி எளிமையாக பின்பற்றி தயாராகிறீர்கள் என்பதை பொறுத்ததாகும்.
அனைவருக்கும் நான் என்ன செய்வேன் என்பது தெரியும். எனக்கு பேட்ஸ்மேன்கள் என்ன செய்வார்கள் என்பது தெரியும். கடந்த போட்டியிலும் நிதிஷ் ரெட்டி எப்படி பேட்டிங் செய்தார் என்பதை நாம் பார்த்தோம். அவரைப் போன்ற இளம் திறமை வருவது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறியாகும். இவ்வாறு அவர் கூறினார்.