கிரிக்கெட்டில் என்னுடைய ஆசை இதுதான் - ரிங்கு சிங்
|அணிக்கு எது நல்லதோ அதை செய்ய வேண்டும் என்று மட்டும்தான் முடிவு செய்து பேட்டிங் செய்து வருகிறேன் என ரிங்கு சிங் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், துணை கேப்டன் பொறுப்பு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் ரிங்கு சிங் கழற்றி விடப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் குஜராத்துக்கு எதிராக 5 சிக்சர்கள் அடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் பெரும்பாலான போட்டிகளில் சிறந்த பினிஷராக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.
இருப்பினும் தற்போதைய ஐ.பி.எல். தொடரில் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினார் என்ற ஒரே காரணத்திற்காக ரிங்குவை கழற்றி விட்டுள்ள தேர்வு குழு ரிசர்வ் பட்டியலில் மட்டுமே இணைத்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் முதன்மை இந்திய அணியில் இடம் கிடைக்காமல் ரிசர்வ் வீரராக மட்டுமே ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டது அவருக்கு வருத்தம் அளித்திருந்தாலும் அடுத்து தன்னுடைய இலக்கு என்ன? என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நான் பேட்டிங் வரிசையில் கீழேதான் இறங்கி பேட்டிங் செய்து வருகிறேன். அணிக்கு எது நல்லது நல்லதோ அதை செய்ய வேண்டும் என்று மட்டும்தான் முடிவு செய்து பேட்டிங் செய்து வருகிறேன். இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் எனக்கு பேட்டிங் செய்ய அதிகளவு வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பதுதான் உண்மை.
அதேவேளையில் நான் சரியாக பேட்டிங் செய்தேனா? இல்லையா? என்பது முக்கியமல்ல அணியின் நலனுக்காக நான் பின் வரிசையில் களமிறங்கி வெற்றிக்காக போராட வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய எண்ணம். என்னை பொறுத்தவரை எங்கு களமிறங்கினாலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும். நான் எப்போது பேட்டிங் செய்ய களமிறங்கினாலும் போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும். அணிக்கு அணியின் வெற்றிக்கு என்ன தேவையோ அதனை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வேன்" என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "அனைத்து வடிவமான கிரிக்கெட்டிலும் விளையாடுவதே என்னுடைய ஆசை. சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா தொடரின்போது ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அடுத்ததாக நான் விரைவில் டெஸ்ட் போட்டியிலும் விளையாட வேண்டும் என்பதற்காக கடுமையான உழைப்பை வெளிப்படுத்தி வருகிறேன். கிரிக்கெட்டில் மிகப்பெரிய விஷயம் என்றால் டெஸ்ட் கிரிக்கெட்தான். டி20 போட்டிகளில் யார் வேண்டுமானாலும் விளையாடலாம் ஆனால் டெஸ்ட் போட்டியில் விளையாட அனைவருக்குமே வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை" என்று கூறினார்.