< Back
கிரிக்கெட்
அந்த இந்திய வீரருக்கு எதிராக என்னுடைய திட்டம் இதுதான் - நாதன் லயன்
கிரிக்கெட்

அந்த இந்திய வீரருக்கு எதிராக என்னுடைய திட்டம் இதுதான் - நாதன் லயன்

தினத்தந்தி
|
26 Sept 2024 11:00 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது.

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்தியா வெற்றி பெற ரிஷப் பண்ட் முக்கிய பங்காற்றுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களில் இந்தியா வெற்றி பெற ரிஷப் பண்ட் முக்கிய பங்காற்றினார். அப்படிப்பட்ட அவர் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வங்காளதேச டெஸ்ட் தொடரில் சதமடித்து மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.

எனவே இம்முறை எப்படியாவது ரிஷப் பண்ட்டை அமைதியாக வைத்திருக்க முயற்சிப்போம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் அடித்தாலும் அதற்காக கவலைப்படாமல் அவரை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை வைத்துள்ளதாக நாதன் லயன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"நீங்கள் அதிரடியாக விளையாடக்கூடிய ரிஷப் பண்ட் போன்ற ஒருவருக்கு எதிராக பந்து வீச உள்ளீர்கள். அவரிடம் உலகில் உள்ள அனைத்து திறனும் இருக்கிறது. எனவே ஒரு பவுலராக நீங்கள் தவறு செய்வதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும். நீங்கள் நன்றாக செயல்பட வேண்டும்.

ஒருவேளை நான் சிக்சரால் அடி வாங்கினால் அது ஒரு பவுலராக எனக்கு சவாலாக இருக்கும். இருப்பினும் சிக்சர் அடிப்பதற்காக நான் பயப்படப் போவதில்லை. ரிஷப் பண்ட் போன்றவரை வெள்ளைக் கோட்டுக்குள் நிற்க வைத்து எனக்கு எதிராக நிறைய தடுப்பாட்டத்தை விளையாட வைப்பதே சவாலாகும். அந்த சவால் அவரை அவுட்டாக்குவதற்கான வாய்ப்புகளை கொண்டு வரும் என்று நம்புகிறேன்" என கூறினார்.

மேலும் செய்திகள்