நியூசிலாந்து அணியுடன் இதுவே என்னுடைய கடைசி நாள் - முன்னணி வீரரின் அறிவிப்பால் ரசிகர்கள் சோகம்
|நியூசிலாந்துக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியது இதுவே கடைசி நாள் என்று டிரெண்ட் போல்ட் திடீரென புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டிரினிடாட்,
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் (இந்திய நேரப்படி இன்று) முடிவடைந்தன. இதில் சி பிரிவில் இடம்பெற்றிருந்த கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடம் கண்ட அதிர்ச்சி தோல்வி காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறியது .
முன்னதாக இந்தத் தொடரே தம்முடைய கடைசி டி20 உலகக்கோப்பை என்று நியூசிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டிரெண்ட் போல்ட் அறிவித்திருந்தார். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காக ஏற்கனவே அவர் 2022-ம் ஆண்டு நியூசிலாந்தின் மத்திய ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார். இருப்பினும் நாட்டுக்காக ஐ.சி.சி. தொடர்களில் மட்டும் விளையாடுவேன் என்று அறிவித்திருந்தார்.
அதன் காரணமாக டி20 உலகக் கோப்பையில் ஓய்வு பெற்றாலும் அடுத்ததாக பாகிஸ்தானில் நடைபெறும் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்துக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியது இதுவே கடைசி நாள் என்று ட்ரெண்ட் போல்ட் திடீரென புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான போட்டியின் முடிவில் அவர் உருக்கத்துடன் பேசியது பின்வருமாறு:- "இது கொஞ்சம் வித்தியாசமாக உணர்கிறது. இதற்கு மேல் நான் யோசிக்கவில்லை. இப்போது இந்த கருத்து சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். கடைசியாக ஒரு முறை இப்போட்டியில் விளையாடியதை ரசித்தேன். நியூசிலாந்துக்காக விளையாடியதை பெருமையாக நினைக்கிறேன். நியூசிலாந்து அணியுடன் இதுவே என்னுடைய கடைசி நாள் என்பது வருத்தமளிக்கிறது" என்று கூறினார்.
அவருடைய இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.