சென்னை அணியில் என்னுடைய வேலை இதுதான் - ஆட்ட நாயகன் ஜடேஜா பேட்டி
|ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
தர்மசாலா,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், சாம் கர்ரண் தலைமையிலான பஞ்சாப் கிங்சும் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 43 ரன்கள் அடித்தார்.
இதனையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப், சென்னை அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. அந்த அளவிற்கு சிறப்பாக பந்துவீசிய சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
சென்னை அணியின் இந்த வெற்றிக்கு பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு ஆல் ரவுண்டராக ஜொலித்த ஜடேஜா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் பகல் நேரத்தில் போட்டி நடைபெற்றதால் பிட்ச் ஸ்லோவாக இருக்கும் என்பதை பார்த்து தெரிந்து கொண்டதாக ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார். அத்துடன் விக்கெட்டுகள் விழும்போது பார்ட்னர்ஷிப் அமைப்பதே தனது வேலை என்று தெரிவிக்கும் அவர் தெரியாத பிட்ச்சில் சி.எஸ்.கே. பவுலர்கள் அசத்தியதாக பாராட்டியுள்ளார்.
இது குறித்து போட்டியின் முடிவில் அளித்த பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-"பகல் நேரத்தில் போட்டி நடைபெற்றதால் பிட்ச் ஸ்லோவாக இருந்தது. விக்கெட்டுகள் விழுந்த போது 30 - 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசியில் பவுலர்களுக்கு போதுமான இலக்கை கொடுக்க விரும்பினோம். எங்களுடைய பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.
பவர் பிளே ஓவர்களில் பிட்ச் எப்போதும் பிளாட்டாக இருப்பதுபோல் தெரியும். ஆனால் பந்து பழையதாக மாறியதும் அது நன்றாக வராது. புதிய மைதானத்தில் நீங்கள் விளையாடும்போது பிட்ச் எப்படி இருக்கும் என்பது உங்களுக்கு தெரியாது. நாங்கள் 15 - 20 ரன்கள் விரைவாக எடுத்ததாக கருதினோம். ஆரம்பத்திலேயே விக்கெட் விழுந்தால் பார்ட்னர்ஷிப் அமைப்பதே என்னுடைய வேலையாகும்" என்று கூறினார்.