< Back
கிரிக்கெட்
இது போன்ற நிகழ்வு எனக்கும் பல முறை நடந்து இருக்கிறது -  பாண்ட்யா விவகாரம் குறித்து சுமித் கருத்து
கிரிக்கெட்

இது போன்ற நிகழ்வு எனக்கும் பல முறை நடந்து இருக்கிறது - பாண்ட்யா விவகாரம் குறித்து சுமித் கருத்து

தினத்தந்தி
|
30 March 2024 5:08 AM IST

பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பும் விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித் கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வாங்கப்பட்ட ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை அந்த அணி புதிய கேப்டனாக நியமித்தது.

இதற்கு ஏற்கனவே ஏராளமான மும்பை ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இதற்கு காரணமாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்ட்யாவை தங்களுடைய கேப்டனாக நியமித்ததாக மும்பை நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதற்கு மும்பை ரசிகர்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் அந்த அணியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்வதை நிறுத்தி உச்சகட்ட எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அத்துடன் நடப்பு தொடரில் முதல் இரு ஆட்டங்களில் மைதானத்தில் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித் கருத்து தெரிவிக்கையில் 'வெளியில் இருப்பவர்களுக்கு, ஓய்வறையில் என்ன நடக்கும் என்பது தெரியாது. இது போன்ற நிகழ்வு எனக்கும் பலதடவை நடந்து இருக்கிறது. அது பற்றி நான் கவலைப்பட்டதில்லை.

இன்னும் சொல்லப்போனால் அதன் மீது எந்தவித கவனத்தையும் செலுத்தாமல் தவிர்த்து விட்டேன். ஆனால் வீரர்கள் களத்தில் இருக்கும்போது நிச்சயம் அதை கேட்பார்கள். ஒவ்வொருவருக்கும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு உரிமை உண்டு. இதை எப்படி நாம் கையாளுகிறோம் என்பதே முக்கியம்.

ரசிகர்களின் கேலி, கிண்டல் பாண்ட்யாவை பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் இதற்கு முன்பு அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இதை சந்தித்து இருக்க மாட்டார். இதை அவர் கண்டு கொள்ளாமல் இருப்பதே நல்லது. அடுத்து சொந்த மண்ணில் (மும்பை வான்கடே மைதானம்) நடக்கும் ஆட்டத்தில் ரசிகர்களின் வரவேற்பு எந்த மாதிரி இருக்கும் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்' என்றார்.

மேலும் செய்திகள்