< Back
கிரிக்கெட்
ரோகித் தலைமையிலும் இப்படி நடந்துள்ளது - பாண்ட்யாவுக்கு இந்திய முன்னாள் வீரர் ஆதரவு

image courtesy: AFP

கிரிக்கெட்

ரோகித் தலைமையிலும் இப்படி நடந்துள்ளது - பாண்ட்யாவுக்கு இந்திய முன்னாள் வீரர் ஆதரவு

தினத்தந்தி
|
4 April 2024 8:53 PM IST

நடப்பு ஐ.பி.எல். தொடரில் புதிய கேப்டன் பாண்ட்யா தலைமையில் மும்பை அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

புதுடெல்லி,

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி புதிய கேப்டன் பாண்ட்யா தலைமையில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

மும்பை அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோகித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு பாண்ட்யாவை கேப்டனாக்கிய முடிவை பல மும்பை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும், மும்பை இந்தியன்ஸ் போட்டிகள் நடைபெறும் அனைத்து மைதானங்களிலும் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையில் இதற்கு முன் 5 போட்டிகளில் தொடர்ந்து மும்பை தோற்றுள்ளதாக சேவாக் ரசிகர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார். அதே சமயம் 7 போட்டிகளுக்கு பின் எதிர்பார்த்த முடிவு கிடைக்காத பட்சத்தில் 2022-ம் ஆண்டு சி.எஸ்.கே. அணியைப்போல பாண்ட்யாவின் மும்பை கேப்டன்ஷிப் மீண்டும் ரோகித்திடம் ஒப்படைக்கப்படலாம் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ரோகித் சர்மா தலைமையிலும் மும்பை அணி 5 போட்டிகளில் 5 - 0 என்ற கணக்கில் தொடர்ச்சியாக தோற்றுள்ளது. இதற்கு முன் அவர்கள் பிளே ஆப் சுற்றிலும் தோற்றுள்ளனர். எனவே பாண்ட்யா விஷயத்திலும் மும்பை பொறுமையுடன் இருப்பார்கள். இவையெல்லாம் புள்ளி விவரங்கள். இருப்பினும் இந்த வருடம் 3 போட்டிகளை தாண்டி தோல்வியை சந்தித்தால் அது மும்பை அணி நிர்வாகத்தின் பொறுமையை சோதிக்கும்.

இதற்கு முன் பஞ்சாப், சென்னை போன்ற அணிகள் அதை செய்துள்ளன. குறிப்பாக ஜடேஜாவிடம் கேப்டன்ஷிப் பொறுப்பை சென்னை கொடுத்தது. ஆனால் தோனி பின்னர் அதை எடுத்துக் கொண்டார். அது தொடரின் பாதியிலேயே நடைபெற்றது. எனவே 3 போட்டிகள் மட்டுமே முடிந்துள்ள இந்த நேரத்தில் மும்பை அது போன்ற முடிவை எடுக்கும் என்று நான் நினைக்கவில்லை. அது அணிக்கும் நல்ல செய்தியை கொடுக்காது. ஆனால் 7 போட்டிகள் முடிந்த பின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை பார்த்து தொடரின் பாதியில் மும்பை முக்கிய முடிவை எடுக்கலாம்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்